முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயில் சித்திரை தேர்த் திருவிழா கொடியேற்றம்

திருநெல்வேலி குறுக்குத்துறையில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்திரைத் தேர்த் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:09 AM
பகிர்:

திருநெல்வேலி குறுக்குத்துறையில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்திரைத் தேர்த் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விழாவையொட்டி வெள்ளிக்கிழமை காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதன்பின்பு கோயில் கொடிமரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

3, 4-ம் தேதிகளில் காலை மற்றும் இரவில் பூங்கோயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா வருகிறார். 5-ம் தேதி மாலை யானை வாகனத்திலும், 6-ம் தேதி காலையில் யானை வாகனத்திலும், இரவு மயில்வாகனத்திலும், 7-ம் தேதி இரவு பூங்கோயில் வாகனத்திலும் சுவாமி திருவீதி வலம் வருகிறார்.

8-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு அருள்மிகு ஆறுமுகர் உருகுசட்டம், சண்முகவிலாசம் கட்டளை நிகழ்வு நடைபெறுகிறது. அதன்பின்பு தண்டியல்பல்லக்கும், வெற்றிவேர் சப்பரத்தில் அருள்மிகு ஆறுமுகப் பெருமான் எழுந்தருளும் சிறப்பு நீராட்டு வழிபாடும், இரவில் தங்கச்சப்பரத்தில் சிகப்பு சாத்தி உருத்திரன் காட்சியும் நடைபெறுகிறது. அதன்பின்பு சுவாமி நெல்லை மாநகருக்கு எழுந்தருள்கிறார்.

9-ம் தேதி காலையில் வெள்ளைச்சாத்தி (நான்முகன் காட்சி) நடைபெறுகிறது. இரவில் பச்சை சாத்தி திருமால் காட்சியும், ஆறுமுகர் சேர்க்கை, வெட்டுக்குதிரை நிகழ்வும் நடைபெறுகின்றன. 10-ம் தேதி காலையில் தண்டியல் பல்லக்கும், இரவில் திருக்கயிலாய வாகனத்தில் சுவாமி எழுந்தருளலும் நடைபெறுகின்றன.

முக்கிய நிகழ்வான தேரோட்டம் இம் மாதம் 11-ம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 7 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. இரவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஏழு வண்ணப்பல்லக்கு நடைபெறுகிறது. இம் மாதம் 12-ம் தேதி காலை 10 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது.

இரவில் வெள்ளிமயில் வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஏற்பாடுகளை கோயில் கண்காணிப்பாளர் மற்றும் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →