முகப்பு
தற்போதைய செய்திகள்

ரயில்வே போலீஸ் நிலையத்தில் இளைஞர் இறந்த விவகாரம்: இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் இடைநீக்கம்

விழுப்புரம் ரயில்வே போலீஸ் நிலையத்தில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் இறந்த விவகாரம் தொடர்பாக அக் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உள்பட

Updated On : 8 மே, 2014 at 6:57 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 10:42 AM

விழுப்புரம் ரயில்வே போலீஸ் நிலையத்தில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் இறந்த விவகாரம் தொடர்பாக அக் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உள்பட 5 ரயில்வே போலீஸார் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

 கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அஞ்சல், கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் ஜெயவேல்(25). இவர் ரயில் பயணிகளிடம் புத்தகம் விற்கும் தொழில் செய்து வந்தார்.

ரயிலில் வந்த பயணி ஒருவரின் செல்போன் மற்றும் ரூ.600 ரொக்கம் ஆகியவை சில தினங்களுக்கு முன் திருடுபோயின. இது தொடர்பாக விசாரிக்க ஜெயவேலை போலீஸார் அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்ட ஜெயவேல் மர்மமான முறையில் இறந்தார். போலீஸார் ஜெயவேலை அடித்துக் கொலை செய்துவிட்டதாக பல்வேறு தரப்பினர் புகார் கூறினார்.

Advertisement

அதிகாரிகள் நேரில் விசாரணை

 இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன், விழுப்புரம் ரயில்வே காவல் கண்காணிப்பாளர் திருச்சி கோட்ட (பொறுப்பு) ராஜவேல், ரயில்வே டி.எஸ்.பி. தனவேல் ஆகியோரும் நேரில் விசாரணை நடத்தினர். இச் சம்பவத்தில் போலீஸôர் சம்மந்தப்பட்டிருப்பதால் காவல் நிலையத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தும்படி விழுப்புரம் மாவட்ட தலைமை நீதிபதிக்கு அறிக்கை அளித்தனர். அவரது உத்தரவைத் தொடர்ந்து குற்றவியல் நீதிமன்றம் 1-ன் நீதிபதி விக்னேஷ் பிரபு விசாரணை நடத்தினார். இதனைத் தொடர்ந்து ஜெயவேலுவின் சடலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரதே பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

ஐந்து போலீஸார் இடைநீக்கம்

 இதற்கிடையில் ரயில்வே காவல் நிலையத்தில் இளைஞர் ஜெயவேல் இறந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசுதேவன், ஏட்டு பாலமுருகன், போலீஸார் திருக்குமரன், லோகேஸ்வரன், ஸ்ரீநாத் ஆகியோரை இடைநீக்கம் செய்து ரயில்வே டிஐஜி பாஸ்கர் உத்தரவிட்டுள்ளார்.

 ஜெயவேலின் சடலத்தை வாங்கிச் செல்வதற்காக அவரது தந்தை ராஜா, மனைவி புவனேஸ்வரி மற்றும் உறவினர்கள் விழுப்புரம் வந்தனர். அவர்கள் பிரதே பரிசோதனை அறை முன் காத்திருந்தனர். இறந்த ஜெயவேலுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த மூன்று தினங்களுக்கு முன் ஊருக்குச் சென்ற ஜெயவேல் தனது குழந்தையின் பிறந்த நாளை கொண்டாடிவிட்டு மீணடும் விழுப்புரம் வந்துள்ளார். இந் நிலையில் அவர் ரயில் நிலையத்தில் இறந்துவிட்டதாக திடீரென்று வீட்டுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் நாங்கள் வந்துள்ளோம் என்று தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.