100 நாள் வேலையில் சம்பளம் குறைப்பு:நெல்லையில் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டத்தில் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் குறைத்து வழங்குவதாக புகார் தெரிவித்து திங்கள்கிழமை திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு
ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டத்தில் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் குறைத்து வழங்குவதாக புகார் தெரிவித்து திங்கள்கிழமை திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராதாபுரம் ஒன்றியம், உவரி ஊராட்சிக்குட்பட்ட ஆனைகுடியில் மகாத்மாகாந்தி ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டத்தின் கீழ் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது. இப்பணியில் அப்பகுதியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த 5 மாதங்களாக பணி செய்து வருகின்றனர்.பணி தொடங்கப்பட்ட சில தினங்கள் மட்டும் அரசு நிர்ணயித்த சம்பளம் ரூ. 148 ம் வழங்கப்பட்டது. அதன் பிறகு ஊரக வேலையில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டதை விட குறைவாக சம்பளம் வழங்குவதாக புகார் எழுந்துள்ளது.
சம்பளம் குறைத்து வழங்குவதாக புகார் தெரிவித்தால், தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்க மறுக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
திங்கள்கிழமை ஆனைகுடி கிராமத்தை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட பெண்கள் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு முற்றுகையிட்டனர். சம்பளம் குறைத்து வழங்குவது குறித்து ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த சம்பளத்தை ஊராட்சி நிர்வாகம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.