கோடையில் நிரம்பிய குண்டாறு அணை: விவசாயிகள் மகிழ்ச்சி
அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் 36 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை திங்கள்கிழமை நிரம்பியது. அணைகளின் நீர்மட்டம் கணிசமாக அதிகரித்திருப்பதால் கோடை கால சாகுபடிக்கு
அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் 36 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை திங்கள்கிழமை நிரம்பியது. அணைகளின் நீர்மட்டம் கணிசமாக அதிகரித்திருப்பதால் கோடை கால சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
கன்னியாகுமரி கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது. வறண்டு காணப்பட்ட கடனாநதி, ராமநதி அணைகளின் நீர்மட்டம் 40 அடி வரை உயர்ந்துள்ளது.
36 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை திங்கள்கிழமை நிரம்பியது. அண்மையில் பெய்த மழையில் 14.10 அடியாக இருந்த குண்டாறு அணையின் நீர்மட்டம் 22 அடி உயர்ந்து முழு கொள்ளளவை எட்டியுள்ளது.செவ்வாய்க்கிழமை அணைகளின் நீர்மட்டம் நிலவரம்: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 53.85 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 67.42 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 67.64 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 59.60 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 65.00 அடியாகவும் இருந்தது.
பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 259.07 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 64 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. இம்மாவட்டத்தில் உள்ள பிற அணைகளுக்கு பெரிய அளவில் நீர்வரத்து இல்லை. நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணைகள் மூடப்பட்டுள்ளன.
கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 48.23 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 48.50 அடியாகவும், வடக்குபச்சையாறு அணையின் நீர்மட்டம் 13.00 அடியாகவும், கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 6.50 அடியாகவும் இருந்தது.திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கு அணைகளில் இருந்து ஓரிரு நாளில் தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாயிகள் மகிழ்ச்சி:
பிரதான அணைகள் மற்றும் குறைந்த கொள்ளளவை கொண்ட அணைகளின் நீர்மட்டம் கணிசமாக அதிகரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கோடை கால சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிடைத்துள்ளது. மேலும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தாமிரவருணி பாசனத்தில் கார் பருவ சாகுபடி பணிகளை தொடங்கும் வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சித் தெரிவித்தனர்.