சிதம்பரம் அருகே வடக்குமாங்குடி கலவலரத்தில் காயமுற்றவர் மரணம்: உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு
சிதம்பரம் அருகே தேர்தல் முன்விரோதத்தில் தலித் மக்கள் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் காயமுற்ற ஒருவர் சனிக்கிழமை இறந்தார். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை
சிதம்பரம் அருகே தேர்தல் முன்விரோதத்தில் தலித் மக்கள் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் காயமுற்ற ஒருவர் சனிக்கிழமை இறந்தார். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை பெற மாட்டோம் என உறவினர்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் தெரிவித்துள்ளனர்.
சிதம்பரம் அருகே உள்ள வடக்குமாங்குடி கிராமத்தில் தேர்தலில் வாக்கு சேகரிக்கும் போது இரு சமூகத்தினரிடையே முன்விரோதம் ஏற்பட்டதாக தெரிகிறது.இதனையடுத்து ஏப்.24-ம் தேதி தேர்தல் முடிவுற்றவுடன் இரவு 7 மணிக்கு மேல் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 20 பேர் கொண்ட கும்பல் உருட்டு கட்டை மற்றும் ஆயுதங்களுடன், அப்பகுதியில் உள்ள மற்றொரு சமூகமான தலித்மக்கள் வசிக்கும் காலனிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வீடுகள், வாகனங்கள் மற்றும் பொருள்களை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவத்தில் வடக்குமாங்குடி காலனியைச் சேர்ந்த ராணி (45), பெத்தான் (70), நாகூரான் (60), குருநாதன்(56), பழனி (80), பாப்பா (65) ஆகிய 6 பேர் காயமுற்று சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் குமார் உள்ளிட்ட 50 பேர் மீது வழக்குப் பதிந்தனர். இதில் 25 பேரை கைது செய்தனர். ஆனால் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகள் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கலவரத்தில் காயமுற்ற பழனி (80) என்பவர் சிகிச்சை முடிந்து கடந்த வாரம் வீடு திரும்பினார். சனிக்கிழமை மீண்டும் உடல்நிலை மோசமானதால், ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அவரது உறவினர்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன், பால.அறவாழி உள்ளிட்டோர், தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்திய முக்கிய குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை பெற மாட்டோம் என மறுத்துவிட்டனர். இதனால் இறந்து போன பழனியில் உடல் பிரதே பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது.