இந்திய மீனவர்கள் பிரச்னைக்கு சுமூகத் தீர்வு காண மோடியை சந்திப்போம்: தேசிய மீனவர் பேரவை தலைவர் இளங்கோ
இந்தியாவில் மீனவர் நலனில் இதுவரை ஆண்ட எந்த மத்திய அரசும் அக்கறை கொள்ளவில்லை. இந்திய-இலங்கை மீனவர் பேச்சுவார்த்தையில் சுருக்குவலை, இரட்டை மடி வலை பயன்படுத்தப்போவதில்லை என
இந்திய மீனவர்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு சுமூகத் தீர்வு காண நரேந்திர மோடியை விரைவில் சந்திக்க உள்ளோம் என தேசிய மீனவர் பேரவை தலைவர் என்.இளங்கோ கூறியுள்ளார்.
புதுச்சேரியிலுள்ள தேசிய மீனவர் பேரவைத் தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
இந்தியாவில் மீனவர் நலனில் இதுவரை ஆண்ட எந்த மத்திய அரசும் அக்கறை கொள்ளவில்லை. இந்திய-இலங்கை மீனவர் பேச்சுவார்த்தையில் சுருக்குவலை, இரட்டை மடி வலை பயன்படுத்தப்போவதில்லை என தெரிவித்துள்ளோம். அவ்வாறு மீறி பயன்படுத்தினால் மீனவ பஞ்சாயத்தாரே நடவடிக்கை எடுப்பார்கள். அதேநேரத்தில் 40 ஆண்டுகளாக விசைபடகுகளில் இழுவை வலை பயன்படுத்தி வருகிறோம். அதை படிப்படியாக குறைக்கவும், மாற்று வழி ஏற்பாடு செய்ய மத்திய அரசு உதவ வேண்டும்.
வரும் 3 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 90 நாட்களுக்கு மீன்பிடிப்பது தொடர்பாக இந்திய-இலங்கை மீனவர் தரப்பில் உடன்பாடு ஏற்பட்டது. இரு நாட்டு மீனவ பிரதிநிதிகளும் ஏற்ற நிலையில் இலங்கை வெளியுறவுத்துறை மற்றும் சட்டத்துறையினர் இம்முறையை ஏற்கவில்லை. தற்போது இலங்கை மீனவ பிரதிநிதிகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். இருநாட்டு மீனவ பிரதிநிதிகள் பேசி முடிவு எடுத்த பிறகு இரு நாட்டு அரசு பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசிக்க முடிவு எடுத்துள்ளோம்.
இருநாட்டு மீனவர்கள் இடையிலான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும். இது இரு கட்டமாக நடக்கும். 3-வது கட்டத்தில் அரசு பிரதிநிதிகளுடன் நடக்கும்.
இந்திய-இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையிலான மீனவர் பிரச்சினை தொடர்பாக பிரதமராக பொறுப்பு ஏற்கும் மோடியை விரைவில் சந்திக்க உள்ளோம்.மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் மீனவர் நலன் தொடர்பாக பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். வேளாண் அமைச்சகத்தை பிரித்து மத்திய அரசில் மீன் வளம் மற்றும் மீனவர் நல அமைச்சகம் அமைக்க வேண்டும். மீனவ சமுதாயத்தினருக்கு அமைச்சராகும் வாய்ப்பை தர வேண்டும் என்று வலியுறுத்துவோம் என்றார் இளங்கோ.