முகப்பு
தற்போதைய செய்திகள்

பழனி அருகே சிறுமியை கிண்டல் செய்ததால் தகராறு: இருவர் கைது

பழனி அருகே சத்திரப்பட்டி ஸ்டாலின் நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ்.  இவரது மனைவி சாந்தி(45). இவர்கள் மகள் ரேவதி(14). இவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தனியார் பள்ளியில் 9ம்வகுப்பு பயின்று வருகிறார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:19 AM
பகிர்:

பழனி அருகே சிறுமியை கிண்டல் செய்ததால் ஏற்பட்ட தகராறில் வாலிபர் தற்கொலை முயற்சி செய்தார்.  மேலும் வாலிபரின் பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.

பழனி அருகே சத்திரப்பட்டி ஸ்டாலின் நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ்.  இவரது மனைவி சாந்தி(45). இவர்கள் மகள் ரேவதி(14). இவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தனியார் பள்ளியில் 9ம்வகுப்பு பயின்று வருகிறார். சத்திரப்பட்டி கலைஞர் நகரை சேர்ந்தவர் நாட்ராயன்(39).  இவரது மகன் சரவணபிரகாஷ்(16).  கடந்த திங்கள்கிழமை ரேவதி வீரலப்பட்டி பிரிவில் உள்ள மளிகைக்கடைக்கு சென்றபோது சரவணபிரகாஷ் பாண்டி என்பவர் மகள் கக்கம்மாள் மூலமாக ரேவதிக்கு காதல்தூது அனுப்பியுள்ளார்.  இதற்கு மறுத்த ரேவதியை சரவணபிரகாஷ் விசிலடித்தும், ஜாடை செய்தும் கிண்டல் செய்துள்ளார். 

இதுகுறித்து ரேவதி தனது தாயார் சாந்தியிடம் தெரிவிக்கவே அவர் செவ்வாய்க்கிழமை சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இந்நிலையில் மகளை கிண்டல் செய்த சரவணக்குமார் வீட்டுக்கு ரேவதியின் தந்தை மோகன்ராஜ் சென்று கண்டித்து கன்னத்தில் அறை கொடுத்துள்ளார். இதில் மனமுடைந்த சரவணக்குமார் சாணிப்பவுடரை கரைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை அவரது சகோதரர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலமாக பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். 

இதுகுறித்து சரவணக்குமாரின் தாயார் காளீஸ்வரி(32)யும் சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ஸ்டாலின் நகரை சேர்ந்த முத்துக்காளை மகன் கோபால்(30) என்பவரை சரவணக்குமாரின் தந்தை நாட்ராயன், தாயார் காளீஸ்வரி, சகோதரர் மணிராஜா(19), முட்டி மகன் மகுடீஸ்வரன் ஆகியோர் மோகன்ராஜூக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி கையாலும், கம்பாலும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.  இதில் கோபால் பலத்த காயமடைந்தார். 

இதுகுறித்து புதன்கிழமை கார்த்திக்(31) கொடுத்த புகாரின் பேரில் சத்திரப்பட்டி போலீஸார் நாட்ராயன், காளீஸ்வரி இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.