மணப்பாறை அருகே அரசுப் பேருந்துகள் மோதிய விபத்தில் 2 பேர் பலி: 10 பேர் படுகாயம்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதி இன்று அதிகாலை விபத்துக்குள்ளானதில் டிரைவர் உட்பட இருவர் பலியானார்கள். 10 பேர்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதி இன்று அதிகாலை விபத்துக்குள்ளானதில் டிரைவர் உட்பட இருவர் பலியானார்கள். 10 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சேலத்திலிருந்து சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நோக்கி புறப்பட்ட அரசுப் பேருந்து இன்று அதிகாலை மணப்பாறை அருகே திருச்சி மதுரை நான்கு வழிச்சாலையில் வளநாடு கைகாட்டி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த நிலையில் பேருந்தின் சக்கரத்தின் டயர் பஞ்சர் ஏற்பட்டதால் பேருந்தை சாலை ஓரமாக நிறுத்தி பயணிகளை மாற்றுப்பேருந்தில் அனுப்பி விட்டு பேருந்தை ஓட்டிவந்த தருமபுரி மாவட்டம் ரேகவள்ளி ஊரைச் சேர்ந்த திருமூர்த்தி(47) என்ற ஓட்டுநர் பேருந்தின் அருகே டயரை மாற்றும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது சென்னையிலிருந்து தூத்துக்குடி நோக்கி மற்றொரு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது.
இந்த பேருந்தில் ஓட்டுநராக தூத்துக்குடியைச் சேர்ந்த பெருமாள் என்பவரும், நடத்துநராக குருநாதன் என்பவரும் இருந்தனர். தூத்துக்குடி சென்ற அரசு பேருந்து சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த திருப்பத்தூர் பேருந்தின் மீது பின் பகுதியில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளும் அருகிலிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வளநாடு காவல் உதவி ஆய்வாளர் ராமநாதன், காவலர் சேது மற்றும் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மணப்பாறை அரசு பொது மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே திருப்பத்தூர் பேருந்து ஓட்டுநர் திருமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிவகங்கை மாவட்டம் சூரக்குடி அருகேயுள்ள எஸ்.கோவில்பட்டியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் மலைச்சாமி வயது 47 என்பவரும் இறந்தார்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த சிவகாசியைச் சேர்ந்த பாஸ்கர் வயது 45, நடத்துநர் குருநாதன், கடலூரைச் சேர்ந்த சந்திரசேகர் வயது 32, குழஞ்சி வயது 33, பாண்டிச்சேரியைச் சேர்ந்த விஜயகுமார் வயது 45, மேலூரைச் சேர்ந்த அழகு வயது 55, ராஜேஸ்வரி வயது 50, சேலத்தைச் சேர்ந்த பாபு வயது 59 உள்ளிட்ட 10 பேர் படுகாயமடைந்து மணப்பாறை மற்றும் மதுரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மணப்பாறை காவல் துணைக்கண்காணிப்பாளர் முத்தரசு சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினார். இவ்விபத்து குறித்து வளநாடு போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.