முகப்பு
தற்போதைய செய்திகள்

சபரிமலையில் ஐயப்ப சேவா சமாஜம் சார்பில் 18 கோடி மதிப்பில் அன்னதான மண்டபம் கட்ட ஏற்பாடு

சபரிமலையில் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பில் சுமார் 18 கோடி மதிப்பில் அன்னதான மண்டபம் கட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அமைப்பின் அகில பாரத இணை செயலாளர் ராஜன்

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:56 AM
பகிர்:

சபரிமலையில் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பில் சுமார் 18 கோடி மதிப்பில் அன்னதான மண்டபம் கட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அமைப்பின் அகில பாரத இணை செயலாளர் ராஜன் தெரிவித்துள்ளார்.

பழனி அடிவாரம் அருணாச்சல மஹாலில் ஞாயிற்றுக்கிழமை சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பில் ஆன்மீக குடும்ப சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் பாபுராஜகோபால் தலைமை வகித்தார்.  பழனி நகர தலைவர் கிருஷ்ணகுமார் முன்னிலை வழங்கினார்.  கோட்டப் பொருப்பாளர் சந்திரமௌலீஸ்வரன் வரவேற்புரை வழங்கினார்.  மாவட்ட செயலாளர் செந்தாமரைக்கண்ணன், நகர செயலாளர் சுவாமிநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  விழாவில் ஐயப்ப சேவா சமாஜத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் குடும்பசகிதமாக பங்கேற்றனர்.  அகிலபாரத இணைச் செயலாளர் ராஜன், மாநில பொதுச் செயலாளர் துரைசங்கர், மாநில இணை செயலாளர்கள் கணேசன், பாலசுப்ரமணியம், தென்தமிழக அமைப்பு செயலாளர் ஹரி உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்தினர். அகிலபாரத இணைச் செயலாளர் ராஜன் தெரிவித்ததாவது:-

சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வருகிறது.  இதில் சுமார் பதினைந்தாயிரம் பக்தர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.  தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மஹாராஷ்டிரா என ஐந்து மாநிலங்களில் 1,300க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்ட இந்த அமைப்பு தமிழகத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டுள்ளது.  ஐயப்பனை தரிசனம் செய்ய வருடத்தில் மூன்று மாதத்துக்கு மட்டும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.  தற்போது மாதா, மாதம் வரும் பக்தர்கள் எண்ணிக்கை சராசரியாக உயர்ந்து வருகிறது.

சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் எங்கள் அமைப்பு அன்னதானம் வழங்கி வருகிறது.  சீசன் அல்லாத மாதங்களில் கூட ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அன்னதானத்தில் பங்கேற்கின்றனர்.  தற்போது சபரிமலையில் பக்தர்கள் அமர்ந்து சாப்பிடும் வகையில் சுமார் 18 கோடி மதிப்பில் கட்டிடம் கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக எந்த மாநில அரசிடமும் நிதி எதிர்பார்க்காமல் உறுப்பினர்கள் மூலமாக மட்டுமே நிதி பெறப்பட்டு வருகிறது. சபரிமலைக்கு வரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்த நிலைக்கல்லில் பாரபட்சமின்றி பார்க்கிங் ஏற்பாடு செய்ய கோரிக்கை விடுத்துள்ளோம். ஐயப்ப சுவாமியை வருடத்தில் 48நாட்கள் விரதமிருந்து செல்வதை தவிர்த்து எப்போதுமே தரிசனம் செய்யும் வகையில் பக்தர்கள் பழக்கவழக்கங்களை மாற்ற வேண்டும் என்பதற்காக ஆன்மீக குடும்ப சங்கம நிகழ்ச்சிகளை அமைப்பு மேற்கொண்டு வருகிறது. 

இதனால் ஐயப்ப பக்தர்களிடம் நல்லபழக்க வழக்கங்கள் பெருகும்.  விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை உள்ளிட்ட பல்வேறு நல்ல பழக்கத்தால் தனிஒழுக்கம் ஏற்பட்டு சுற்றுப்புறங்களில் நட்பு பெருக வழிஏற்படும்.  இது தொடரும் பட்சத்தில் நாட்டில் பிரச்சினைகளே எழாது.  தற்போது சபரிமலையில் உள்ள எங்கள் மையங்களில் அன்னதானம் மட்டுமன்றி இலவச குளிக்கும் வசதி, மருத்துவ வசதிகளும் செய்து வருகிறோம்.  தவிர பக்தர்களின் வாகனங்களில் ஏற்படும் பழுதுக்கு சீர்செய்ய நபர்களை ஏற்பாடு செய்து தருகிறோம். இதுமட்டும் இலவசம் கிடையாது என தெரிவித்தார்.  மதிய நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கூட்டம், கலந்தாலோசனை கூட்டம் ஆகியன நடைபெற்றது. கூட்ட நிறைவில் ஐயப்பசுவாமி பாடல்கள் பாடப்பட்டு ஐயப்பசுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.