முகப்பு
தற்போதைய செய்திகள்

போலீஸ் நிலைய தகவல் தொடர்பு கோபுரத்தில் ஏறி டீக்கடைக்காரர் தற்கொலை மிரட்டல்

பட்டுக்கோட்டை லட்சத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையன் (45). இவர் அறந்தாங்கி சாலையில் தேநீர் மற்றும் பழச்சாறு விற்பனைக் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் மதுபானம் விற்கப்படுவதாகவும்,

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:01 AM
பகிர்:

பட்டுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை போலீஸ் நிலைய தகவல் தொடர்பு கோபுரத்தில் ஏறி டீக்கடைக்காரர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பட்டுக்கோட்டை லட்சத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையன் (45). இவர் அறந்தாங்கி சாலையில் தேநீர் மற்றும் பழச்சாறு விற்பனைக் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் மதுபானம் விற்கப்படுவதாகவும், அதனால் கருப்பையனுக்கு அடிக்கடி போலீஸ் தொந்தரவு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கருப்பையன் மது போதையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.20 மணிக்கு பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்திலுள்ள 250 அடி உயர காவல் தகவல் தொடர்பு உயர்நிலை கோபுரத்தில் ஏறி அதன் உச்சிக்குச் சென்று நின்று கொண்டார். கையில் பெட்ரோல் பாட்டிலும், தீப்பெட்டியும் வைத்திருந்த அவர் தனது கடையை போலீஸார் சேதப்படுத்தியதாகவும், அதனால் கோபுரத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் மிரட்டல் விடுத்தார்.

இதனால் நகர காவல் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவயிடத்துக்குச் சென்ற பட்டுக்கோட்டை தீயணைப்புப் படையினர் கருப்பையனை கீழே அழைத்து வர முயன்றனர். உறவினர்கள் சிலரும் கருப்பையனை மீட்க கோபுரத்தில் ஏறினர். ஆனால் தன்னை மீட்க யாரும் மேலே வரக்கூடாது என்று கருப்பையன் கூச்சலிட்டார். அதனால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது.

இதற்கிடையே, கருப்பையன் மனைவி, மகள், பண்ணைவயல் ஊராட்சித் தலைவர் சு. ராஜாத்தம்பி உள்பட பலர் கீழே இறங்கி வருமாறு மைக்கில் பேசினர். இதைத் தொடர்ந்து   உறவினர்கள் 2 பேர் கோபுரத்தில் ஏறி மாலை 5 மணிக்கு கருப்பையனை பத்திரமாக இறக்கி கீழே கொண்டு வந்தனர். இதையடுத்து கருப்பையனின் தற்கொலை மிரட்டல் போராட்டம் மூன்றே முக்கால் மணி நேரத்துக்குப் பின் முடிவுக்கு வந்தது.

காவல் நிலைய வளாகத்தில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை இரவு வரை கருப்பையன் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

முழு கட்டுரையைப் படிக்க →