சிதம்பரத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலரை தாக்கிய 5 பேர் கைது
தானே புயல் வீடு கட்டுவதில், ஊராட்சிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக மேலதிகாரிகளுக்கு புகார் அளித்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புதன்கிழமை தாக்கப்பட்டார். அவரை தாக்கிய 5 பேரை சிதம்பரம் நகர போலீஸார் கைது செய்தனர்.
தானே புயல் வீடு கட்டுவதில், ஊராட்சிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக மேலதிகாரிகளுக்கு புகார் அளித்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புதன்கிழமை தாக்கப்பட்டார். அவரை தாக்கிய 5 பேரை சிதம்பரம் நகர போலீஸார் கைது செய்தனர்.
சிதம்பரம் அருகே கீரப்பாளையம் ஒன்றியத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றியவர் பழனிசுவாமிநாதன் (45). இவர் அங்கு பணியாற்றும் போது செங்கல்மேடு, துணிசிரமேடு, சி.வீரசோழகன் ஆகிய ஊராட்சிகளில் தானே புயல் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடுகள் நடந்துளளதாக மேலதிகாரிகளுக்கு புகார் அளித்தார். இதனையடுத்து அவர் அங்கிரு்து குமராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலராக இடம்மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் கடந்த அக்.9-ம் தேதி தனது மாமாவை பார்த்த பழனிசுவாமிநாதன் செங்கல்மேடு கிராமத்திற்கு சென்ற போது ஊராட்சி மன்றத் தலைவர் குட்டி என்கிற கருணாகரன் வழிமறித்து ஏன் புகார் அளித்தார் என திட்டியுள்ளார். இதனையடுத்து அக்.12-ம் தேதி செல்போனில் அழைத்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பழனி சுவாமிநாதன் சிதம்பரம் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தாலுக்கா போலீஸார் இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.
இந்நிலையில் பழனிசுவாமிநாதன் சிதம்பரம் பதிவாளர் அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்த போது ஒருகும்பல அவரை சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமுற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிசுவாமிநாதன் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் வழக்குப் பதிந்து, செங்கல்மேடு கிராமத்தைச் சேர்ந்த அருள்பிரகாசம் (50), கிருஷ்ணசாமி (54), சாமிநாதன் (33), திருநாவுக்கரசு (59), தமிழரசன் (43) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.