தீபாவளி பாதுகாப்பு: விருதுநகர் மாவட்டத்தில் மக்கள் கூடுமிடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்கள் கூடுமிடங்களில் 1500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக
விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்கள் கூடுமிடங்களில் 1500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீபாவளி திருநாளுக்கு இன்னும் இரண்டு நாள்களே உள்ளன. இதனால் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான ஜவுளி உள்ளிட்ட பொருள்களை வாங்குவதற்காக கடை வீதிகளில் குவிந்து வருகின்றனர். எனவே கூட்ட நெரிசலையும், போக்குவரத்து நெருக்கடியையும் கட்டுப்படுத்தும் வகையில் முக்கிய இடங்களில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், நகைக் கடைகள், ஜவுளி நிறுவனங்கள் மற்றும் பலசரக்கு கடை உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. எனவே இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி ஜேப்படியில் ஈடுபடும் பெண்கள் மற்றும் திருடர்கள் புகுந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
இதைக் கருத்திற் கொண்டு சாதரண உடையில் கண்காணிக்கும் பணியில் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், முக்கிய இடங்களில் போலீஸார் சிறிய கூம்பு வடிவ குழாய் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் செய்து வருகின்றனர். அதேபோல், பஜார், தெப்பம் கிழக்கு மற்றும் மேற்கு பகுதி, காமராஜர் நினைவில்ல பகுதி, நகராட்சி சாலை, கச்சேரி சாலை, தேசபந்து மைதானம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வெப்கேமரா பொறுத்தப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிப்பட இருக்கிறது. மேலும், காவல் துணைக் கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி தலைமையில் போலீஸார் ரோந்து செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இரவு முழுவதும் சாலை மற்றும் சாலையோரங்களில் பட்டாசு கடைப்பகுதிகளில் காணப்படும் கூட்டத்தை கண்காணித்து போக்குவரத்துகளையும் ஒழுங்குப்படுத்தவும் போக்குவரத்துக் காவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
இதேபோல், ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை, திருச்சுழி உள்ளிட்ட பகுதிகளிலும் உள்ளூர் காவல் நிலைய போலீஸார்களுடன் சிறப்பு காவல் படை பிரிவினர், இளைஞர் காவல் படை, ஊர்க்காவல் படையினர் உள்ளிட்டோர் மொத்தம் 1500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.