முகப்பு
தற்போதைய செய்திகள்

கனமழைக்கு கடனாநதி அணை நிரம்பியது: 500 கனஅடி நீர் ஆற்றில் திறப்பு

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் 84 அடி கொள்ளளவு கொண்ட கடனாநதி அணை வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் நிரம்பியது. இதையடுத்து அணைக்கு வந்து கொண்டிருந்த உபரி நீர் 500 கனஅடி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:05 AM
பகிர்:

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் 84 அடி கொள்ளளவு கொண்ட கடனாநதி அணை வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் நிரம்பியது. இதையடுத்து அணைக்கு வந்து கொண்டிருந்த உபரி நீர் 500 கனஅடி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்த பலத்த மழையால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. மணிமுத்தாறு அருவி, பாணதீர்த்த அருவியில் வெள்ளம் குறையவில்லை. 7 ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை (மில்லி மீட்டரில்): பாபநாசம் அணையில் 41, பாபநாசம் கீழ் அணை 29, சேர்வலாறு அணை 16, மணிமுத்தாறு அணை 26.2, கடனாநதி அணை 32, ராமநதி அணை 14, கருப்பாநதி அணை 4.5, குண்டாறு அணை 2.4, அடவிநயினார் அணை 3, நம்பியாறு அணை 5, கொடுமுடியாறு அணை 24.

இது தவிர நான்குனேரியில் அதிகபட்சமாக 115 மி.மீ மழையும், சேரன்மகாதேவியில் 96 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. அம்பாசமுத்திரத்தில் 35 மி.மீ மழையும், கன்னடியன் அணைக்கட்டில் 33 மி.மீ மழையும், மூலக்கரைப்பட்டியில் 31 மி.மீ மழையும், களக்காட்டில் 32.4 மி.மீ மழையும், தென்காசியில் 10.8 மி.மீ மழையும், செங்கோட்டையில் 2.2 மி.மீ மழையும், ஆய்க்குடியில் 25.6 மி.மீ மழையும், ராதாபுரத்தில் 4 மி.மீ மழையும் பெய்துள்ளது.

கடனாநதி நிரம்பியது: மழை நீடித்து வரும் நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளில் 84 அடி கொள்ளளவு கொண்ட கடனாநதி அணை வியாழக்கிழமை நிரம்பியது. அணையில் முகாமிட்டு அதிகாரிகள் நீர்வரத்தை கண்காணித்தனர். மாலை 5 மணியளவில் நீர்மட்டம் 83.00 அடியை எட்டியதும் அணைக்கு வந்து கொண்டிருந்த 500 கனஅடி உபரிநீரை கருணை ஆற்றில் திறக்கப்பட்டது.

அப்போது பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் கண்காணிப்பு பொறியாளர் அப்துல்ஹமீது, சிற்றாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் நிர்மல்கிறிஸ்துதாஸ், உதவி செயற்பொறியாளர்கள் ஞானசேகரன், மாரியப்பன், உதவி பொறியாளர்கள் சங்கர்ராஜ், பேட்ரசன்குழந்தை உள்ளிட்டோர் இருந்தனர்.

ஆற்றில் வெள்ளம்: மழை நீடித்ததால் கருணை ஆற்றில் சுமார் 2,000 கனஅடி தண்ணீர் சென்றது. அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால் ஆற்றில் வெள்ளம் அதிகரித்தது.

ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் கருத்தபிள்ளையூர், கீழஆம்பூர் உள்ளிட்ட தாழ்வான பகுதியில் வசிப்போரை பாதுகாப்பான இடத்திற்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. கருணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததை அடுத்து தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

வேகமாக உயர்கிறது: நீர்பிடிப்பு பகுதியில் நீடித்த கனமழையால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 15 அடி உயர்ந்து 95.40 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 2,940 கனஅடி நீர்வரத்து இருந்தது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 12 அடி உயர்ந்து 111.15 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 10 அடி உயர்ந்து 72.50 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,830 கனஅடி நீர்வரத்து இருந்தது.

ராமநதி அணையின் நீர்மட்டம் 7 அடி உயர்ந்து 73.50 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 128 கனஅடி நீர்வரத்து இருந்தது. தொடர்ந்து மழை பெய்தால் 84 அடி கொள்ளளவு கொண்ட இந்த ஓரிரு நாளில் நிரம்ப வாய்ப்புள்ளது. கருப்பாநதி அணை நீர்மட்டம் 12 அடி உயர்ந்து 64.31 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 91 கனஅடி நீர்வரத்து இருந்தது.

குண்டாறு அணையின் நீர்மட்டம் 36.10 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 1.50 அடி உயர்ந்து 115.00 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணையின் நீர்மட்டம் 7 அடி உயர்ந்து 18.00 அடியாகவும், நம்பியாறு அணையின் நீர்மட்டம் 12.91 அடியாகவும், கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 7 அடி உயர்ந்து 22.00 அடியாகவும் இருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →