முகப்பு
தற்போதைய செய்திகள்

பழனி பேருந்து நிலையத்தில் தனி நபராக தூய்மைப்பணி மேற்கொண்ட தன்னார்வ இளைஞர்

பழனி பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை தனி நபராக இளைஞர் ஒருவர் தூய்மைப்பணி மேற்கொண்டார்.  இவரது பணியை பாராட்டிய இளைஞர்கள் சிலரும் பணியில் உதவியது பலரையும்

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:07 AM
பகிர்:

பழனி பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை தனி நபராக இளைஞர் ஒருவர் தூய்மைப்பணி மேற்கொண்டார்.  இவரது பணியை பாராட்டிய இளைஞர்கள் சிலரும் பணியில் உதவியது பலரையும் திரும்பிப்பார்க்க வைத்தது.

திருவண்ணாமலை மாவட்டம் தலையாம்பள்ளத்தை சேர்ந்தவர் மணிமாறன்(28).  8ம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர் நாட்டம் பொதுமக்களுக்கான சேவையில் திரும்பியதைத் தொடர்ந்து கடந்த 13 ஆண்டுகளாக இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று தம்மால் முடிந்த சேவைகளை செய்து வருகிறார்.  கடந்த சில வருடங்களுக்கு முன்பு பழனி வந்த இவர் பேருந்து நிலையம், கிரிவீதியில் இருந்த மனநிலை பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு முடிதிருத்தி, ஷேவ் செய்து புத்தாடையும், போர்வையும் வழங்கினார்.  அதே போல மனநிலை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நைட்டி போன்ற புத்தாடைகளை வழங்கினார்.   இந்நிலையில் திங்கள்கிழமை மாலை பழனிக்கு வந்த மணிமாறன் பழனி ஆர்.எப்.ரோடு, பேருந்து நிலையத்தில் இருந்த மனநிலை பாதித்தவர்களை சுத்தம் செய்து புத்தாடை வழங்கினார்.  பின்னர் செவ்வாய்க்கிழமை பழனி பேருந்து நிலையம் மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்ட பேருந்து நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனி நபராக தூய்மைப்பணியில் ஈடுபட்டார்.  கைகளுக்கு பாதுகாப்பாக உறை அணிந்து பயணிகளே செல்ல அச்சப்படும் அசுத்த பகுதிகளுக்கு சென்று அங்கிருந்த குப்பைகளை அகற்றி சாக்கில் போட்டு கட்டி குப்பைத் தொட்டியில் போட்டு பணிகளை துவக்கினார். அவர் செய்த வேலைகளை சிலர் பார்த்து விட்டு சிறிது நேரம் செய்து விட்டு சென்றுவிடுவார் என நினைத்த நிலையில் அப்பகுதி நெடுக அவர் யாரையும் எதிர்பாராமல் பணியை தொடர்ந்தார். 

இதைப் பார்த்த பேருந்து நடத்துனர்களும், ஓட்டுனர்களும் அவரை அணுகி விபரத்தை கேட்டு தங்களால் பணியில் பங்கேற்க இயலாததை தெரிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.  சில கல்லூரி இளைஞர்கள் அவரின் செயலை கண்டு அவரிடம் கேட்டு குப்பைகளை குறைந்த பட்சம் குப்பைத்தொட்டி வரையிலாவது கொண்டு வந்து போடுகிறோம் என ஆர்வத்துடன் பங்கேற்றனர்.  

இதுகுறித்து தன்னார்வ இளைஞர் மணிமாறனிடம் கேட்டபோது,  கோயில் நகரான பழனிக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும், பொதுமக்களும் வந்து செல்கின்றனர்.ஆனாலும் பேருந்து நிலையம் முழுக்க பலபகுதிகளில் சுகாதார சீர்கேடாக உள்ளது.  தற்போது மழைகாலமாக வேறு உள்ளது.  இந்த சீர்கேட்டான இடத்தில் பரவும் கொசுக்கள், ஈக்கள் டெங்கு, மலேரியா, சிக்கன்குனியா உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்களை பரப்பும்.  இவை பேருந்து நிலையங்களில் உள்ள உணவு விடுதிகளுக்கு எளிதில் சென்று பதார்த்தங்களில் அமர்வதால் நோய் பரவும் தன்மை விரைவாகும்.  வயதானவர்கள், குழந்தைகளுக்கும், நோய்எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கும் நோய் தொற்றும்.  நான் மேற்கொண்டுள்ள இப்பணியால் நகரம் தூய்மையாகாவிடினும், குறைந்த பட்சம் இளைஞர்களிடையே விழிப்புணர்வாவது ஏற்படும்.   இந்த நோக்கம் நூறுசதவீதம் தேவையில்லை. பத்துசதவீதம் பேரை சென்றடைந்தாலே வெற்றிதான் என்றார். 

மேலும், பேருந்து நிலையத்தை சுற்றி பார்த்ததில் ஹெச்ஐவி பாதித்து உடல் அழுகி சிலர் உள்ளனர் என்றும், இவர்களை சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய ஏற்பாடுகள் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.  திருப்பூரில் பனியன்களை வாங்கி மும்பை, தில்லியில் விற்பனை செய்து வரும் வருவாயில் இதுபோன்ற சேவைகளை செய்து வரும் மணிமாறனுக்கு அமெரிக்காவில் உள்ள ஹவாய் மாநிலத்தில் உள்ள உலக தமிழ்ப்பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.  தவிர, சிறந்த சேவைக்காக டைம்ஸ் நவ் சேனல் இவரை டாப் 10ல் ஒருவராக தேர்வு செய்து எல்.கே.அத்வானி கையால் பரிசு வழங்கி பாராட்டியுள்ளது.  சமீபத்தில் தமிழக கவர்னர் ரோசய்யாவிடமும் சென்று இவர் தனது சேவைகளை தெரிவித்து ஆசி பெற்றுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.