முகப்பு
தற்போதைய செய்திகள்

பழனியில் கந்தர் சஷ்டி விழா.  அரோகரா கோஷத்துக்கு இடையே சூரசம்ஹாரம்.

தமிழகத்தின் முதன்மைக் கோயிலான பழனியில் புதன்கிழமை கந்தர் சஷ்டி விழாவை முன்னிட்டு  சூரசம்ஹாரம் நடைபெற்றது. இன்று(வியாழக்கிழமை) அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேதர் சண்முகர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:08 AM
பகிர்:

தமிழகத்தின் முதன்மைக் கோயிலான பழனியில் புதன்கிழமை கந்தர் சஷ்டி விழாவை முன்னிட்டு  சூரசம்ஹாரம் நடைபெற்றது. இன்று(வியாழக்கிழமை) அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேதர் சண்முகர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

   பழனியில் நடைபெறும் விழாக்களில் கந்தர் சஷ்டி விழா முழுக்க முழுக்க மலைக்கோயிலில் நடைபெறுவதால் இது சிறப்பம்சம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  இலட்சக்கணக்கான மக்கள் குவியும் இந்த கந்தர் சஷ்டி விழா கடந்த வெள்ளிக்கிழமை மூலவர், உற்சவர், சண்முகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு காப்புக்கட்டும் நிகழ்ச்சியும் துவங்கியது.

 ஒருவார காலம் நடைபெற்ற விழாவை முன்னிட்டு மலைக்கோயிலில் தினமும் கல்ப பூஜையுடன் உச்சிக்கால பூஜை நடத்தப்பட்டு, சண்முகருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடத்தப்பட்டது.  உற்சவருக்கு நாயக்கர் மண்டபம், பாரவேல் மண்டபங்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டது. தங்கமயில், வெள்ளிக்காமதேனு, தங்கசப்பரங்களில் சுவாமி புறப்பாடும் திருக்கோயில் கஸ்தூரி வலம் வர நடைபெற்றது.   ஆறாம் நாள் நிகழ்ச்சியாக புதன்கிழமை சூரசம்ஹாரம் நடைபெற்றது.  அதிகாலை 4 மணிக்கு மலைக்கோயிலில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின் 12 மணிக்கு உச்சிக்காலமும், தொடர்ந்து 1.30 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடைபெற்றன. 

முக்கிய நிகழ்ச்சியான அருள்மிகு சின்னக்குமாரசாமி அசுரர்களை வதம் செய்யும் பொருட்டு மலைக்கொழுந்து அம்மனிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி மதியம் 3 மணிக்கு நடைபெற்றது.  அதைத் தொடர்ந்து மூலவர் சன்னதி திருக்காப்பிடப்பட்டு சுவாமி படிவழியாக யானை முன்னே வர அடிவாரம் வந்தடைந்தார்.  மாலையில் 4.30 மணிக்கு அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயில் இருந்து அருள்மிகு முத்துக்குமாரசாமி வள்ளி, தேவசேனா சமேதராக வெள்ளிமயில் வாகனத்தில் திருக்கல்யாண மண்டபம் எழுந்தருளினார். தொடர்ந்து பராசக்திவேலுக்கு திருஆவினன்குடியில் வேலுக்கு பூஜை நடைபெற்ற பின் இரவு 7.20க்கு வடக்கு கிரிவீதியில் யானை முக சூரன் வதம் நடைபெற்றது. பின்பு கிழக்கு கிரிவீதியில் பானுகோபன் வதம், தெற்கு கிரிவீதியில் சிங்கமுக சூரன் வதமும், மேற்கு கிரிவீதியில் பானுகோபன் சூரன் வதமும் நடைபெற்றது.  சுவாமி பராசக்தி வேலுடன் வரும் போது வேண்டாம் என்றும் சென்றபின் வாவா என்றும் கூறுவதை சூரன் கூறிவது போல தலையாட்டியதைக் கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர்.

 கடைசி சூரன் வதை செய்தபின் சேவலாக மாறுவதை தெரிவிக்கும் விதமாக சேவல் பறக்கவிடப்பட்டது.  இரவு அருள்மிகு முத்துக்குமாரசாமி, சூர்தடித்து வரும் சின்னக்குமாரசாமியை சந்தித்தல் மற்றும் ஆரிய மண்டபத்தில் வெற்றி விழா ஆகியன நடத்தப்பட்ட பின் சுவாமி வெற்றிவேலுடன் மலைக்கு சென்றார்.  மலைக்கோயிலில் நள்ளிரவு சம்ரோட்சண பூஜைகள் நடத்தப்பட்டு அர்த்தஜாமபூஜை நடத்தப்பட்டது.  கந்த சஷ்டியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தண்டுசாதம், கீரை, கனிவகைகள் சாப்பிட்டு சஷ்டி விரதத்தை முடித்தனர். விழா நாட்களில் சுவாமிக்கு படையல் உபயங்கள் அடிவாரம் சாதுசுவாமிகள் மடம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.   இன்று(வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு மலைக்கோயிலில் அருள்மிகு சண்முகருக்கும், மாலை 5.30 மணிக்கு அருள்மிகு முத்துக்குமாரசாமிக்கு பெரியநாயகியம்மன் கோயிலிலும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.

 சூரசம்ஹார நிகழ்ச்சியில் பழனிக்கோயில் இணை ஆணையர்(பொறுப்பு) இராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா,  பழனி எம்எல்ஏ., வேணுகோபாலு,  முதுநிலை கணக்கியல் அலுவலர் பழனிச்சாமி, சித்தனாதன் சன்ஸ் பழனிவேலு, கந்தவிலாஸ் செல்வக்குமார், பாஸ்கரன், ஹோட்டல் கண்பத் செந்தில்குமார், திருப்பூர் லாட்ஜ் ராமநாதன், நகர்மன்ற துணைத் தலைவர் முருகானந்தம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.