புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தரை திரும்பப் பெற வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
மாணவர்கள், பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் நலனைக் காக்க துணைவேந்தர் டாக்டர் சந்திரா கிருஷ்ணமூர்த்தியை திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
மாணவர்கள், பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் நலனைக் காக்க துணைவேந்தர் டாக்டர் சந்திரா கிருஷ்ணமூர்த்தியை திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. அக்கட்சியின் மாநில செயலாளர் வெ.பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தராக சந்திரா கிருஷ்ணமூர்த்தி பொறுப்பேற்றதில் இருந்து அங்கு சர்வாதிகார நிலை தென்படுகிறது. அனைத்து செயல்களும் சட்டவிதிகளை மீறி மேற்கொள்ளப்படுகின்றன.தனியார் பொறியியல் கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி வழங்கி பிரச்னையில் சிபிஐ விசாரணைக்கு ஆளாகி உள்ள பேராசிரியர் அரிகரனுக்கு பதவி உயர்வு, தனது நோக்கத்தை நிறைவேற்ற ஒத்துழைக்காத பதிவாளர் யதுவன்ஷியை மாற்ற நடவடிக்கை, வெளிப்படையற்ற முறையில் பாதுகாவலர்கள் நியமனம், பாலியல் தொல்லைக்கு ஆளான மாணவிகள் மீதே நடவடிக்கை என பல்வேறு செயல்கள் நடந்துள்ளன.
புதுவை பல்கலைக்கழகம் தொடங்கிய போது புதுவை மாணவர்களுக்கு 25 சதவீத ஒதுக்கீடு தரப்பட்டது. ஆனால் 30-க்கு மேற்பட்ட துறைகளில் மாணவர்களுக்கு ஒதுக்கீடு தர வில்லை. இதற்கு அதிகாரம் உள்ள துணைவேந்தர் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையை கைகாண்பிக்கிறார்.தன்னிச்சையாக பதிவாளரை மாற்றுவதில் அக்கறை செலுத்துகிறார். புதிதாக தொடங்கப்பட்ட சட்டத்துறைக்கு வகுப்பறைகளே இல்லை, ஆசிரியர்களே நியமிக்கப்படவில்லை. மாணவர் பேரவைத் தேர்தலை நடத்தவில்லை.மாணவர்கள் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட 400 சைக்கிள்கள் வீணாகிவிட்டன.பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக புகார்கள் அனுப்பப்பட்டதால் மனிதவள மேம்பாட்டுத்துறை உண்மை கண்டறியும் குழுவை அமைத்துள்ளது.
நிலைமைகள் தனக்கு சாதகமாக உள்ளதை அறிந்த துணைவேந்தர் பதிவாளரை மாற்ற முயல்கிறார். ஆனால் அக்குழுவில் ஒரு நபர் விலகி விட்டார். இதைக் கண்டித்து பல்கலைக்கழக கூட்டு நடவடிக்கை குழுவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.மத்திய அரசு இப்பிரச்னையில் தலையிட்டு துணைவேந்தரை திரும்பப் பெறவும்,உண்மை அறியும் குழுவை மாற்றி அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் பெருமாள்.