பாலசமுத்திரம் பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோற்சவ தேரோட்டம்
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய உபகோயிலான அருள்மிகு பாலசமுத்திரம் அருள்மிகு அகோபில வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய உபகோயிலான அருள்மிகு பாலசமுத்திரம் அருள்மிகு அகோபில வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருத்தேரோட்ட நிகழ்ச்சி வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
பழனியை அடுத்த பாலசமுத்திரத்தில் அருள்மிகு அகோபில வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது. முந்தைய காலங்களில் பழனிக்கோயிலுக்கு இங்கிருந்து நிவேத்தியத்துக்கான பொருட்கள் வழங்கப்பட்டதாக செவிவழி செய்திகள் தெரிவிக்கின்றனர். பழனிக்கோயிலுக்கு படியளந்த பெருமானாக கருதப்படும் இக்கோயிலில் கடந்த செப்.3ம் தேதி ஆவணி பிரம்மோற்சவ விழா திருக்கொடியேற்றத்துடன் விமரிசையாக துவங்கியது. 11 நாள் நடைபெறும் இத்திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை வேளைகளில் அருள்மிகு பூதேவி, ஶ்ரீதேவி சமேதர் அகோபில வரதராஜப் பெருமாள் சப்பரம், பவளக்கால் சப்பரம், அன்னவாகனம், கருடவாகனம், குதிரை வாகனம், அனுமார் வாகனம், சிம்மவாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா எழுந்தருளினார். செவ்வாய்க்கிழமை இரவு விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தை தொடர்ந்து புதன்கிழமை பாரிவேட்டை நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை திருத்தேரோட்டம் நடைபெற்றது.அதிகாலை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அர்ச்சனைகள் நடத்தப்பட்டு வண்ணமாலைகள், ஆபரணங்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 8 மணியளவில் சுவாமி தேரேற்றம் செய்யப்பட்டார். பின்பு சிறப்பு தீபாராதனை நடைபெற்ற பின் பக்தர்கள் திருத்தேர் வடம் பிடிக்க முக்கிய வீதிகள் வழியாக திருத்தேரோட்டம் நடைபெற்றது. கோயிலின் உட்புற சன்னதி, தேர் மற்றும் சுவாமிக்கு பழனி புஷ்ப கைங்கர்ய சபா சார்பில் மாலைகள், தோரணம் வழங்கப்பட்டிருந்தது. இரவு சப்பரத்தில் சுவாமி புறப்பாடு நடத்தப்பட்டது. நாளை(சனிக்கிழமை) விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
திருத்தேரோட்ட நிகழ்ச்சியில் பழனிக்கோயில் உதவி ஆணையர் மேனகா, மேலாளர் ரவிச்சந்திரன், கண்காணிப்பாளர் சரவணன், பேஷ்கார் முரளி, புஷ்பகைங்கர்ய சபா செயலர் மருதசாமி, திருக்குறுங்குடி ஜெயலட்சுமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.