சிதம்பரத்தில் சோழர்கால நீர்வழி சுரங்க வடிகாலில், நாயக்கர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு
சிதம்பரத்தில் சோழர் காலத்தில் உருவாக்கப் பெற்ற நீர்வழி சுரங்க வடிகாலில், கிபி 14-15 நூற்றாண்டைச் சேர்ந்த துண்டுக்கல்வெட்டை அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்
சிதம்பரத்தில் சோழர் காலத்தில் உருவாக்கப் பெற்ற நீர்வழி சுரங்க வடிகாலில், கிபி 14-15 நூற்றாண்டைச் சேர்ந்த துண்டுக்கல்வெட்டை அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை துணைப் பேராசிரியர்களும், திராவிட வரலாற்று ஆய்வுக்கழக ஆய்வாளர்களுமான இல.கணபதிமுருகன், ஆ.முத்துக்குட்டி கல்வெட்டு குறித்து தெரிவித்தது: சிதம்பரம் நகரத்தின் வடக்குவீதி, தில்லைக்காளியம்மன் கோயில் செல்லும் வழியில் அம்பலத்தாடியார் தெருவில் தோரணவாயிலின் கீழ்பகுதியில் தில்லைக்காளியம்மன் சிவப்பிரியை தெப்பக்குளத்திற்கு நடராஜர் கோயில் சிவகங்கை தீர்த்தகுளத்திலிருந்து நீர் செல்லும் சுரங்க நீர்வழி பாகையில் இக்கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. இரண்டு வரிகளுடன் தமிழ் மற்றும் கிரந்தம் கலந்த மணிப்பிரவாள நடையில் எழுதப் பெற்றுள்ள கல்வெட்டின் வாயிலாக பண்டைய தமிழர்கள் மழைநீர் சேகரிப்பு குறித்து பெற்றிருந்த விழிப்புணர்வை அறிய முடிகிறது.
நீர்வழி சுரங்க வடிகால்: சோழநாடு காவிரி பாசனத்தில் செழித்திருந்த போதும், தற்போது ஏற்படுகின்ற வெள்ள சேதங்கள் போல அப்போதைய கால கட்டத்திலும் அடிக்கடி நிகழ்ச்சி வந்துள்ளது. கிபி 1125 ஆண்டில் விக்கிரசோழன் மன்னன் இருந்த போது காவிரி ஆற்றில் ஏற்பட்ட பெரிய வெள்ளப் பெருக்கும், அதனை தொடர்ந்து ஏற்பட்ட பஞ்சமும் சோழ நாட்டையும், தொண்டை நாட்டையும் கடுமையாக பாதித்தன. நிலவரியை மக்கள் கொடுக்க இயலாமல் தாங்கள் வாழ்ந்து இடங்களை விட்டு புலம் பெயர்ந்துள்ளனர். இத்தகைய சூழலில்தான் வெள்ளநீர் வடிகாலாகவும், மழைநீர் சேகரிப்பு மையமாகவும் மாற்றும் நோக்கில் விக்கிர சோழன் இந்த நீர் சுரங்க வழியை அமைத்துள்ளான்.
விக்கிரம சோழனும், சிதம்பரமும்: முதலாம் குலோத்துங்கனின் மைந்தனான விக்கிரம சோழன், சோழ தேசத்தை கிபி 1118-1135ல் ஆட்சி செலுத்தியவனாவான். சிதம்பரத்தில் அபோது இருந்த சோழ அரண்மனையில் தங்கி தில்லை ஆடல்வல்லானை வணங்குவதிலேயே பெரும் விருப்பம் கொண்டவனாக இருந்தான். தன் தாயார் தியாகவில்லியின் பெயரால் நிலம் வாங்கி, அந்நிலத்திற்குரிய வரியை நீக்கி தில்லை வாழ் அந்தணர்களுக்கு நான்கு வீதிகளிலும் மனை கட்டி கொடுத்தவன் விக்கிரம சோழன். தில்லைக் கோயிலின் திருச்சுற்று மதில் அவனது காலத்தில் கட்டப்பட்டது. மேலும் இப்போது சோழனின் படைத்தளபதியாக இருந்த நரலோகவீரன் என்று சிறப்பிக்கப்பெற்ற அரும்பாக்கிழவன் மணவிற்கூத்தன் காளிங்கராயன், சோன் இடப்ப பணியை நிறைவேற்று வகையில் சிவகங்கை தீர்த்தகுளத்தை கருங்கற்களால் அமைத்தான். சிவகாமி அம்மன் கோயிலை தனிக்கோயிலாக கட்டினான். சோழர்கள் அமைத்த நீர்வழி சுரங்க வடிகாலை நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் மீண்டும் கிபி 14-15 நூற்றாண்டுகளில் புதுப்பித்துள்ளனர். இதனையே தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டு உறுதி செய்கிறது. கிபி 1891, 1979 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற கோயில் குடமுழுக்கின் போது இச்சுரங்க நீர்வழிப்பாதை தூர்வாரப்பட்டுள்ளது என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.
சோழர்கால மழைநீர் சேகரிப்பு!
இக்கல்வெட்டு குறித்து கல்வெட்டறிஞர் குடவாயில் பாலசுப்பிரமணியன் தெரிவித்தது: இது ஒரு முழுமையடையாத கல்வெட்டாகும். தேவி நாயகன் சதா சேவை என்று மட்டுமே கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. தேவிநாயகன் என்பவன் இந்நீர் சுரங்கவழியை புணரமைத்துள்ளான். தேவிநாயகன், தில்லைக்காளி தேவியின் பக்தனாக இருந்திருக்க வேண்டும். தேவியின் மேல் கொண்ட பக்தியால் தேவிநாயகன் என்றே தன் பெயரை குறித்துள்ளான். சதா சேவை என்பது இறைவன் பாதத்தில் தான் எப்போதும் சேவயால் நீங்கா இடம் பெற்றிருக்க வேண்டும் என்றும் பொருளில் கல்வெட்டுகளில் தானம் வழங்கியவர்களை குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல்லாடல் ஆகும். இக்கல்வெட்டு கிபி 14-15 ம் நூற்றாண்டுகளில் நாயக்க மன்னர்களின் ஆட்சி காலத்தில் வெளியிடப் பெற்றதாக கல்வெட்டறிஞர் குடவாயில் பாலசுப்பிரணியன் தெரிவிக்கிறார்.