சங்கரராமன் கொலை வழக்கில் மேல்முறையீடு இல்லை: புதுவை மாநில அரசு முடிவு
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கடந்த 3.9.2004-ல் கோயில் வளாகத்திலேயே கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜயேந்திரர், விஜயேந்திரர் உட்பட 25
சங்கரராமன் கொலை வழக்கில் மேல்முறையீடு செய்வதில்லை என புதுச்சேரி மாநில அரசு முடிவு செய்துள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கடந்த 3.9.2004-ல் கோயில் வளாகத்திலேயே கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜயேந்திரர், விஜயேந்திரர் உட்பட 25 பேர் மீது போலீஸôர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கில் குற்றவாளியான ரவிசுப்பிரமணியம் அப்ரூவரானார். இந்த வழக்கை தமிழகத்தில் விசாரித்தால் நீதி கிடைக்காது என்றும் வேறு மாநிலத்தில் விசாரிக்க வேண்டும் என்றும் ஜயேந்திரர் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இதையடுத்து இந்த வழக்கை புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி புதுவை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த 9 ஆண்டுகளாக நடந்த விசாரணையிóல் 181 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.இதில் அப்ரூவர் ரவிசுப்பிரமணியம், சங்கரராமன் மனைவி பத்மா உட்பட பல சாட்சிகள் பிறழ்சாட்சியம் அளித்தனர். வழக்கு விசாரணையின்போது முக்கிய குற்றவாளியான கதிரவன் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கடந்த 23.11.2013-ல் சங்கராச்சாரியார்கள் ஜயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 23 பேரையும் விடுதலை செய்து தலைமை நீதிபதி முருகன் உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் 90 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என்றும் அவர் தீர்ப்பில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு புதுவை அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அப்போதைய துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா அனுமதி அளித்தார். இதன்பிறகு வீரேந்திர கட்டாரியாக மத்திய அரசால் பதவி நீக்கப்பட்டார். தன்னிடம் முழு விபரத்தையும் தெரிவிக்காமலேயே சதி செய்து அதிகாரிகள் மேல்முறையீடு மனுவுக்கு கையெழுத்து பெற்றுவிட்டதாக கட்டாரியா புகாரும் தெரிவித்தார். இதற்கிடையில் அட்டர்னி ஜெனரால் முகுல் ரஸ்தோகி சங்கரராமன் கொலை வழக்கில் மேல்முறையீடு எந்தவித முகாந்திரமும் இல்லை என அவர் கருத்து தெரிவித்திருந்தார்.
சங்கரராமன் கொலை வழக்கில் புதுவை அரசின் நிலைப்பாடு குறித்து சிறப்பு வழக்குரைஞர் 2 வாரத்திற்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் அளித்த மனுவில், மேல்முறையீடு செய்வதற்கான எந்தவித முகாந்திரமும் இல்லை என புதுவை சட்டத்துறை கருதியுள்ளது என தெரிவித்திருந்தார். இதனால் சங்கரராமன் கொலை வழக்கில் மேல்முறையீடு செய்வதில்லை என அரசு முடிவு செய்துள்ளது.