முகப்பு
தற்போதைய செய்திகள்

பழனியில் நவராத்திரி விழா காப்புக்கட்டுடன் துவக்கம்

பழனியில் மலைக்கோயிலில் நவராத்திரி திருவிழா காப்புக்கட்டுதலுடன் விமரிசையாக துவங்கியது.  வரும் அக்.2ம் தேதி சரஸ்வதி பூஜையும், அக்.3ம் தேதி விஜயதசமி அம்புபோடுதல்,

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:51 AM
பகிர்:

பழனியில் மலைக்கோயிலில் நவராத்திரி திருவிழா காப்புக்கட்டுதலுடன் விமரிசையாக துவங்கியது.  வரும் அக்.2ம் தேதி சரஸ்வதி பூஜையும், அக்.3ம் தேதி விஜயதசமி அம்புபோடுதல், வன்னிகாசுரன் வதை ஆகியன நடைபெறுகிறது.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை காப்புக்கட்டுதல் நடைபெற்றது.  உச்சிக்காலத்தின்போது மூலவருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.  தொடர்ந்து சோடஷ உபச்சாரம் நடத்தப்பட்டது. நவராத்திரி விழா துவங்குவதை முன்னிட்டு கர்ப்பகிரகத்தில் உள்ள அருள்மிகு வினாயகர், மூலவர் தண்டாயுதபாணி சுவாமிக்கும், பிரகாரத்தில் உள்ள உற்சவர், வள்ளி தேவசேனா சமேதர் சண்முகர் ஆகியோருக்கு காப்புக்கட்டப்பட்டது.  தொடர்ந்து துவாரபாலகர்கள், கொடிக்கம்பம், மயில்வாகனம் மற்றும் நவவீரர்களுக்கும் காப்புக் கட்டப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை தலைமைகுருக்கள் அமிர்தலிங்கம் தலைமையில் சிதம்பரம் குருக்கள், செல்வசுப்ரமணியகுருக்கள், சுந்தரமூர்த்தி சிவம் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

சுவாமி கொலுவிருத்தலை முன்னிட்டு வரும் அக்.3ம் தேதி வரையிலான 10 நாட்களுக்கு மலைக்கோயிலில் தங்கரத புறப்பாடு நிறுத்தப்பட்டுள்ளது.  உச்சிக்கால பூஜையைத் தொடர்ந்து மலைக்கோயில் போகர் சன்னதியில் போகர் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீசிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிக்கு திருக்கோயில் சார்பில் பரிவட்டம் கட்டி மரியாதைகள் செய்யப்பட்டது.   பின்னர் அருள்மிகு புவனேஸ்வரி அம்மன்,ஸ்ரீசக்கரங்கள், மரகதலிங்கத்துக்கு சிறப்பு பூஜைகளே சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் செய்தார்.  பின்னர் ஸ்ரீபுவனேஸ்வரி அம்மன் புறப்பாடாகி அடிவாரம் புலிப்பாணி ஆசிரமத்துக்கு எழுந்தருளினார்.  மலைக்கோயிலில் வரும் அக்.2ம் தேதி ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையும், அக்.3ம் தேதி அம்புவில் போடுதலும் நடைபெறுகிறது.  அக்.3 அன்று மலைக்கோயிலில் சக்திவேல் புறப்பாடு செய்யப்பட்டு முத்துக்குமாரசாமி, பெருமாள் சுவாமி சகிதம் கோதைமங்கலம் கோதீஸ்வரர் கோயிலில் எழுந்தருள்வார்.  அப்போது மதியமே மலைக்கோயில் திருக்காப்பிடப்படும்.  அம்புவில் போடுதல் மற்றும் வன்னிகாசுரன் வதை நடைபெற்றபின் வேல் மலைக்கு வந்த பிறகு கோயிலில் சம்ரோட்சண பூஜைகள் செய்யப்பட்டு அர்த்தஜாமபூஜை நடத்தப்படும். 

பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலிலும் நவராத்திரி விழாவை முன்னிட்டு அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசாமி உள்ளிட்ட அருள்மிகு கைலாசநாதர், அருள்மிகு பெரியநாயகியம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கும், கோயில்யானை கஸ்தூரிக்கும் காப்புக்கட்டப்பட்டது. விழா நாட்களில் பல்வேறு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெறுகிறது. கோயில்வளாகத்தில் ஆன்மீக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. காப்புக்கட்டு நிகழ்ச்சியில் கண்காணிப்பாளர் முத்துமாணிக்கம், பேஷ்கார்கள் தங்கராஜ், நாராயணன், போகர் சன்னதி ஜம்புசுவாமிகள், பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமான முக்கிய பிரமுகர்களும், அலுவலர்களும் பங்கேற்றனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.