சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா வெற்றி பெற சிறப்பு யாகம்
பெங்களூருவில் நடைபெற்று வரும் சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் வெற்றி பெற வேண்டி பழனி திரு ஆவினன்குடி கோயில் அருகே வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு யாகசாலை பூஜையில் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், ஆயக்குடி ஏ.பி.கணேஷ்கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பெங்களூருவில் நடைபெற்று வரும் சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் வெற்றி பெற வேண்டி பழனி திரு ஆவினன்குடி கோயில் அருகே வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு யாகசாலை பூஜையில் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், ஆயக்குடி ஏ.பி.கணேஷ்கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கர்நாடக மாநிலம் பெங்களுருவில் சிறப்பு நீதிமன்றத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது கடந்த 20ம் தேதி தமிழக முதல்வருக்கு கூடுதல் பாதுகாப்பு, தீர்ப்பை பரப்பன அக்ரஹாரம் வளாகத்தில் வழங்குதல் தொடர்பான கோரிக்கைகளை முதல்வர் தரப்பு வழக்கறிஞர்கள் செந்தில், பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்ததன் பேரில் அவற்றை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு வரும் செப்.27ம் தேதி தீர்ப்பு வழங்கவுள்ளது.
இந்த தீர்ப்பின் போது தமிழக முதல்வர் வெற்றி பெற வேண்டி பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
பழனி திருஆவினன்குடி கோயில் அருகே ஶ்ரீபார்க்கவகுல சௌமிய நாராயண நாயக்கர் பங்குனி உத்திர திருக்கல்யாண மண்டபத்தில் வியாழக்கிழமை முதல்வர் வெற்றி பெற வேண்டி சிறப்பு யாகபூஜை நடைபெற்றது.
மண்டபத்தில் உள்ள அருள்மிகு வினாயகர் முன்பு பிரதானமாக மூன்று கலசங்களில் புனிதநீர் நிரப்பி வைக்கப்பட்டு ஏராளமான சிவாச்சாயர்யார்கள் வேதமந்திரம் முழங்க யாகம் நடைபெற்றது. யாகத்தில் கனிவர்க்கங்கள், மூலிகைகள், பட்டாடைகள் இடப்பட்டு தமிழக முதல்வர் பெயரில் சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டது. அதிகாலை மூன்று மணிக்கு துவங்கிய யாகபூஜை ஆறுமணி வரை நடைபெற்றது. யாகபூஜை நிறைவாக பூர்ணாஹூதி நடைபெற்ற பின் பிரதான கலசங்களில் இருந்த புனிதநீர் வினாயக பெருமானுக்கு ஊற்றப்பட்டு சோடஷ அபிஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பழனி அதிமுக ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், ஆயக்குடியை சேர்ந்த திருப்பூர் ஏ.பி.கணேஷ்கண்ணன், தட்சிணாமூர்த்தி மற்றும் ஏராளமான கட்சியினர் பங்கேற்றனர்.