பழனி அருள்மிகு பெரியாவுடையார் கோயிலில் அமைச்சர் காமராஜ் ஆய்வு
பழனி அருள்மிகு பெரியாவுடையார் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் காமராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
பழனி அருள்மிகு பெரியாவுடையார் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் காமராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
பழனியில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பங்குனி உத்திரத் திருத்தேரோட்டம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு தமிழக உணவுத்துறை மற்றும் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் காமராஜ் வந்திருந்து ஆய்வுப் பணிகள் மேற்கொண்டார்.
மலைக்கோயில் மற்றும் கிரிவீதியில் திருக்கோயில் சார்பில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள சுகாதாரப்பணிகள், பாதுகாப்புப்பணிகள், தரிசன வசதிகளை ஆய்வு செய்த அமைச்சர் பழனிக்கோயிலின் முக்கிய உபகோயிலான அருள்மிகு பெரியாவுடையார் திருக்கோயிலில் ஆய்வுப் பணிகள் மேற்கொண்டார்.
புனித நதியாகிய சண்முகநதியின் கிழக்கு கரையில் மேற்கு நோக்கியவாறு அமைந்துள்ளது அருள்மிகு பெரியாவுடையார் திருக்கோயில். இக்கோயிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்காக தரைத்தளங்கள் சீரமைப்பு, கோபுரங்களில் சுதைகள் புதுப்பித்து வர்ணங்கள் பூசுதல், நந்தி மண்டபத்தில் பணிகள் மேற்கொள்ளுதல் என சுமார் 90 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளது. இப்பணிகளை அமைச்சர் காமராஜ் ஆய்வு செய்தார். கோயில் சிற்பங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூய்மைப் பணி, கோபுரங்களில் அடிக்கப்பட்டுள்ள வர்ணங்கள், அபிஷேக விபரங்கள் குறித்து திருக்கோயில் அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார். முன்னதாக கோயிலில் நடைபெற்ற உச்சிக்கால பூஜையில் பங்கேற்று சிறப்பு வழிபாடுகள் நடத்தினார். பின்னர் அவர் தெரிவித்ததாவது,
பழனிக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு வரும் இலட்சக்கணக்கான பக்தர்கள் நலனுக்காக ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், மலைக்கோயில் பக்தர்களுக்கு வேண்டிய விரைவான தரிசன ஏற்பாடு, சுகாதாரம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் சிறப்பாக செய்து தரப்பட்டுள்ளது. பழனிக்கோயிலுக்கான இரண்டாவது ரோப்கார் குறித்து டெண்டர் விடப்பட்டுள்ளது.
அருள்மிகு பெரியாவுடையார் கோயிலுக்கு வரும் பாதையை சீரமைக்க வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவித்தார். ஆய்வின் போது, பழனிக்கோயில் இணை ஆணையர்(பொறுப்பு) இராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா, செயற்பொறியாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர் நாச்சிமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.