அண்ணாமலைப் பல்கலையில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த உதவிப் பேராசிரியருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த உதவிப் பேராசிரியருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தும், அவர் மீது கிரிமினல் நடவடிக்கை
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த உதவிப் பேராசிரியருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தும், அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் மதுரை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியராக பணியாற்றி வந்தவர் சுப்பிரமணியன். இவர் போலி மதிப்பெண் (எஸ்எஸ்எல்சி) சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக கூறி கடந்த 19-11-2014 அன்று பணியிலிருந்து நீக்கி பல்கலைக்கழக பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார். தன்னிடம் எந்தவித விளக்கம் கேட்காமல் தன்னை பணியில் இருந்து பதிவாளர் நீக்கிவிட்டதாக சுப்பிரமணியன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.அண்ணாமலைப் பல்கலை. சார்பில் மூத்த வழக்குரைஞர் எம்.அஜ்மல்கானும், அரசு தர்பில் முருகானந்தம் ஆகியோர் வாதாடினர். விசாரணை முடிவுற்று வெள்ளிக்கிழமை நீதிபதி தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பு விபரம்:
சில பிரச்சனைகள் காரணமாக பல்கலைக்கழகத்தை அரசு நிர்வகித்தது. அப்போது பல்கலைக்கழகத்தின் தரத்தை உயர்த்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பல்கலை. பணியில் இருப்பவர்களின் அசல் சான்றிதழ்களை உறுதி தன்மை கண்டறிய ஆய்வு செய்ய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அப்போதுதான் மனுதாரர் சுப்பிரமணியன் போலி எஸ்.எஸ்.எல்.சி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது தெரியவந்துள்ளது. மனுதாதர் தனித்தேர்வராக எழுதியதாக கூறுகிறார். ஆனால் அவரது மதிப்பெண் சான்றிதழ் பள்ளியில் படித்த தேர்வு எழுதிய செந்தில்குமார் என்பவரின் மதிப்பெண் சான்றிதழின் பதிவு எண் மற்றும் மதிப்பெண்களை கொண்டதாக உள்ளது. இதை விசாரித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அறிக்கை அளித்த பின்பு மனுதாரர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மனுதாதர் மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டுள்ளது. மனுதாரருக்கு எந்தவிதத்திலும் சலுகை காட் முடியாது. கற்பித்தல் பணி சிறப்பான பணி, இது வருங்கால சந்நதியினருக்கு சேவை செய்யும் பணியாகும். இதுபோன்ற நபர்களை பணி செய்ய அனுமதித்தால், ஒட்டு மொத்த சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படும், வருங்கால சந்ததியினர் தவறாக வழி நடத்தப்படுவர். இதுபோன்ற நபர்களை அனுமதிப்பது, ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷத்தை கலப்பது போன்றதாகும்.
மனுதாரர் தொடர்ந்து பணியாற்ற தகுதியற்றவர். அவரை பணியில் இருந்து நீக்கியது சரியானதுதான். எனவே அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை மதுரை ஒய்.புதுப்பட்டியில் உள்ள தொழுநோய் மறுவாழ்வு இல்லத்தில் செலுத்த வேண்டும். பல்கலைக்கழக அதிகாரிகள் மனுதாரர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தீர்ப்பில் நீதிபதி தெரிவித்துள்ளார்.