சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் மகாகும்பாபிஷேகம்: யாகசாலை பூஜைகள் தொடங்கியது
மே.1-ம் தேதி நடைபெறவுள்ள ஸ்ரீநடராஜர் கோயில் மகாகும்பாபிஷேகத்தை முன்னிட்டு 12 கால யாகசாலை பூஜைகள் சனிக்கிழமை காலை முதல் தொடங்கியது. திரளான பக்தர்கள் பங்கேற்று
மே.1-ம் தேதி நடைபெறவுள்ள ஸ்ரீநடராஜர் கோயில் மகாகும்பாபிஷேகத்தை முன்னிட்டு 12 கால யாகசாலை பூஜைகள் சனிக்கிழமை காலை முதல் தொடங்கியது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
மே.1-ல் மகாகும்பாபிஷேகம்: பூலோக கைலாயமான சிதம்பரம் நடராஜர் கோயிலில் வருகிற மே.1-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தி வீற்றுள்ள சித்சபை கும்பாபிஷேகமும், அதே நேரத்தில் ராஜசபை மற்றும் நான்கு ராஜகோபுரங்களும் மகாகும்பாபிஷகம் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மே 2-ம் தேதி தேர்த்திருவிழாவும், 3-ம் தேதி அதிகாலை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகமும், பிற்பகல் 2 மணிக்கு மேல் தரிசனம் மற்றும் சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. 4-ம் தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதிஉலா காட்சி நடைபெறுகிறது.
யாகசாலை பூர்வாங்க பூஜைகள்: கும்பாபிஷேகத்தை முன்னாட்டு ஏப்.22-ம் தேதி மகாகணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜையின் பூர்வாங்க பணிகள் தொடங்கினர். 23-ம் தேதி ஸ்ரீநவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி நிகழ்ச்சியும் நடைபெற்றன. 24-ம் தேதி ஆச்சார்யார்களுக்கு காப்புக்கட்டும் பூஜை, ஆச்சார்ய வர்ணம், மகா சங்கல்பம், தனபூஜை ((தங்க, வெள்ளி நாணயங்கள், ரூபாய் நோட்டுகளுக்கான பூஜை) நடைபெற்றன.
யாகசாலை பூஜைகள் தொடக்கம்: ஏப்.25-ம் தேதி சனிக்கிழைமை காலை கடங்கள் யாகசாலை பிரவேச நிகழ்ச்சி நடைபெற்றது. சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய மகா கும்பாபிஷேக வைபவதிற்கான குடங்கள் வைதீகோக்த முறையில், தெய்வ ஸான்னித்ய சக்தியேற்றம் செய்யப்பட்டு, 32 கும்பாபிஷேக ஆச்சாரியார்கள் அதிபிரம்மாண்டமான யாகசாலைக்கு, வேத கோஷங்கள் முழங்க, நாதஸ்வர இன்னிசையுடன் ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர் கடஸ்தாபனம் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை முதல் 12 கால ஹோம பூஜைகள் தொடங்கியது. முதல் கால ஹோமம் மற்றும் பூர்ணாஹூதியும் மற்றும் தீபாராதானை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
400 வேத விற்பன்னர்கள்: கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வேதங்கள் மற்றும் திருமுறைகளை ஒதுவதற்கு 400 வேதவிற்பன்னர்களும், 60 ஒதுவா மூர்த்திகளும் வந்துள்ளனர். கும்பாபிஷேகம் மற்றும் யாகசாலை பூஜை ஏற்பாடுகளை கும்பாபிஷேக கட்டளை தீட்சிதர் டி.எம்.தியாகப்பா தீட்சிதர், பொதுதீட்சிதர்களின் கமிட்டி செயலாளர் ஐ.சர்வேஸ்வர தீட்சிதர் மற்றும் பொதுதீட்சிதர்கள் செய்திருந்தனர். யாகசாலை பூஜைகள் தொடக்கத்தை முன்னிட்டு நடராஜர் கோயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன.