பழனியில் ஸ்ரீபருவதராஜகுல மகாஜனங்களுக்காக சுமார் 20 ஆயிரம் கிலோ பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி மும்முரம்
பழனியில் தைப்பூசத் திருவிழா கடந்த மாதம் 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி வெள்ளித்தேர், திருக்கல்யாணம், தைப்பூசத் தேர் மற்றும் தெப்பத்தேர் என பத்து நாட்கள் விமரிசையாக நடைபெற்று பிப்
பழனிக்கு பாதயாத்திரை வந்த இடைப்பாடி ஸ்ரீபருவதராஜகுல மகாஜனங்கள் காவடிக்குழுவுக்கு சுமார் 20 ஆயிரம் கிலோ பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
பழனியில் தைப்பூசத் திருவிழா கடந்த மாதம் 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி வெள்ளித்தேர், திருக்கல்யாணம், தைப்பூசத் தேர் மற்றும் தெப்பத்தேர் என பத்து நாட்கள் விமரிசையாக நடைபெற்று பிப்.6ம் தேதி திருக்கொடி இறக்கத்துடன் நிறைவு பெற்றது. தைப்பூசத் திருவிழா நிறைவு பெற்றபின் இடைப்பாடி ஸ்ரீபருவதராஜகுல மகாஜனங்கள் காவடி வருவது பிரசித்தி பெற்றதாகும். ஒரேநாளில் பழனியே திணறும் அளவுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனி கோயிலுக்கு வந்து தங்கி செல்வது காணக்கண்கொள்ளா காட்சியாகும். காரைக்குடி செட்டியார்கள் காவடி போல இந்த பக்தர்கள் கூட்டமும் பழனிக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாகும்.
கடந்த ஜனவரி மாதம் 30ம் தேதி சேலம் மாவட்டத்தை சேர்ந்த வெள்ளாண்டிவலசு, கவுண்டம்பட்டி, சின்னமணலி, எடப்பாடி, புதுப்பேட்டை மற்றும் கா.புதூரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பழைய இடைப்பாடி ஸ்ரீசெல்லியாண்டியம்மன் கோயிலில் பூஜா திரவியங்கள் நிறைந்த காவடியுடன் நகர்வலம் வந்து முத்திரை நிறைத்து காவடியுடன் பழனிக்கு புறப்பாடு செய்தனர். இவர்கள் அனைவரும் பிப்ரவரி மாதம் 8ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) பழனி அடுத்த மானூரை வந்தடைகின்றனர். கும்பகோணத்தை சேர்ந்த பருவதராஜகுல மக்களும் இங்கு வந்து சேர்கின்றனர். பின்னர் ஆற்றின் கரையில் காவடிக்கு சிறப்பு பூஜைகள் செய்து மொட்டை உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர்.
இதே வேளையில் இந்த சமூகத்தை சேர்ந்த ஆண்களுக்கும் பெண் பார்க்கும் படலமும் நடைபெறுவது சிறப்பம்சமாகும். இதுகுறித்து காவடிக்குழுவின் தலைவர் மணி, செயலர் தங்கவேல், பொருளாளர் அர்த்தனாரி, அதிமுக மீனவரணி மணி ஆகியோர் தெரிவித்ததாவது, இதுபோன்ற காவடி எடுத்து வரும் நேரத்தில் பெண்ணுக்கு மாப்பிள்ளையும், மாப்பிள்ளைக்கு பெண்ணும் அமைவதை சிறப்பான ஒன்றாக இச்சமுதாயத்தினர் கருதுகிறோம். காலை 10 மணிக்கு மேல் பால்காவடி, இளநீர் காவடி, கரும்புக்காவடி, சேவல்காவடி, மயில்காவடி, சர்க்கரைகாவடி என பல்வேறு காவடிகள் எடுத்து வரப்பட்டு பழனிக்கு பட்டிணப்பிரவேசம் செய்து மாலை 3 மணிக்கு மேல் மலையில் காவடிகள் முத்திரை செலுத்தி உச்சிக்காலம், சாயரட்சை கட்டளை, தங்கத்தேர் புறப்பாடு ஆகியவற்றை மேற்கொள்ள உள்ளோம். எங்கள் காவடிக் குழுவுக்கு மட்டுமே ஒருநாள் இரவு மலைக்கோயிலில் தங்கும் உரிமை பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
இதன்படி ஞாயிற்றுக்கிழமை இரவு மலைக்கோயிலில் தங்கி அன்றைய தினத்தில் திருக்கோயிலுக்கு ஏற்படும் மின்செலவு, சுகாதார செலவு தொகைகளை காவடிக்குழு செலுத்தி விடுகிறது. பின் காவடிகளுடன் பக்தர்கள் தங்கள் ஊருக்கு மீண்டும் பாதயாத்திரையாக செல்கின்றனர். இவர்களுக்காக இடைப்பாடி பருவதராஜகுல பழனியாண்டவர் காவடி பொதுக்கமிட்டி சார்பில் மலைக்கோயிலிலும், அடிவாரத்தில் தனியார் மடத்திலும் சனிக்கிழமை சுமார் 20 ஆயிரம் கிலோ பஞ்சாமிர்தம் தயாரித்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 16 டன் மலைவாழை, ஆயிரம் கிலோ பேரீட்சை, 300 கிலோ கற்கண்டு, ஏழாயிரம் கிலோ கரும்புசர்க்கரை, 150 கிலோ தேன், 150 கிலோ நெய் மற்றும் 10 கிலோ ஏலக்காய் ஆகியன கொண்டுவரப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணியை ஏராளமான பக்தர்கள் கண்டு வியந்தனர். மலைவாழை உரிக்கப்பட்டு சில்வர் அண்டாக்களில் போடப்பட்டு சரியான விகிதத்தில் மற்றவை கொட்டப்பட்டு கலக்கிய பின் பஞ்சாமிர்தம் தயார் செய்யப்பட்டு டப்பாக்களில் நிரப்பப்படுகிறது. இவை உச்சிக்கால பூஜையின் போது மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பின் காவடிக் கூட்டத்துக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து கமிட்டி கூறும்போது, இப்போது தயார் செய்யப்படும் பஞ்சாமிர்தம் கைபடாத வரை குறைந்த பட்சம் ஒரு ஆண்டு வரை கெடாது. காவடிக் கூட்டத்தார்க்கு பிரித்த பின் கிலோ சுமார் ரூ.110க்கு விற்பனை செய்யப்படும் எனவும் குழுவினர் தெரிவித்தனர்.