அவதூறு வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்து அதற்கு கால அவகாசம் கேட்டதை அடுத்து, நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு அபராதம் விதித்துள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா உள்ளிட்டோர் மீது தமிழக அரசு 12 அவதூறு வழக்குகளை பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில், அவதூறு வழக்குகள் தொடர்பான விசாரணை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
அவதூறு வழக்குகளை உச்ச நீதிமன்ற அமர்வுக்கு தாங்கள் மாற்றிக் கொள்வதாக விஜயகாந்த் சார்பில் தெரிவிக்கப்பட்டு அதற்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல், நீதிபதி எஸ்.எஸ். சுநதரேஷ் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு கால அவகாசம் வழங்கியது.
இந்த நிலையில், அடுத்த விசாரணை இன்று நீதிமன்றத்தில் வந்த போது, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதற்கான பணிகள் நடந்து வருவதாகவும், மேலும் அவகாசம் வேண்டும் என்றும் விஜயகாந்த் தரப்பில் கோரப்பட்டது.
இதனை கேட்ட சென்னை உயர்நீதிமன்றம் முதன்மை அமர்வு, நீதிமன்ற நேரத்தை வீணடித்தற்காக வழக்கொன்றுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதமாக விஜயகாந்த் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.
மேலும், பிரேமலதா, பார்த்தசாமி எம்எல்ஏ உள்ளிட்ட 4 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 15 நாளில் உச்ச நீதிமன்றத்துக்கு வழக்குகளை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், விஜயகாந்தின் மனு தள்ளுபடி செய்யப்படும் என்றும் நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.