பழனியில் பெண்ணிடம் 12பவுன் செயின் பறிப்பு
பழனி நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலையில் தனியாக செல்லும் பெண்களிடம் மோட்டார்சைக்கிளில் வரும் திருடர்கள் செயின்பறிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தது.
பழனியில் தனியே சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த 12பவுன் நகையை மோட்டார்சைக்கிளில் வந்த திருடர்கள் பறித்து சென்றனர்.
பழனி நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலையில் தனியாக செல்லும் பெண்களிடம் மோட்டார்சைக்கிளில் வரும் திருடர்கள் செயின்பறிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தது. ஆசிரியர்கள், போலீஸார் என அனைத்து நிலைகளில் உள்ளவர்களிடமும் இந்த செயின்பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில் சிலர் பொதுமக்களிடம் மாட்டிக் கொண்ட சம்பவங்களும் நடந்துள்ளது. கடந்த இரு மாதங்களாக இச்சம்பவம் தலைதூக்காமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் மோட்டார்சைக்கிளில் வந்து செயின் பறிக்கும் சம்பவம் துவங்கியுள்ளது. புதன்கிழமை இரவு அண்ணாநகரை சேர்ந்த ஜவஹர் என்பவர் மனைவி நாச்சாத்தாள்(56) மாரியம்மன் கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் போது பின்னே மோட்டார்சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரு வாலிபர்கள் நாச்சாத்தாள் கழுத்தில் இருந்த செயினை பறித்து விட்டு தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து பழனி டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த மாதம் முதல் பழனியில் ஆறு பிரிவுகளாக இரவு ரோந்துக்காக போலீஸார், இளைஞர் காவல் படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அப்படி இருந்தும் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. போலீஸார் இருசக்கர வாகனத்தில் சைரன் ஒலி எழுப்பி வருவது திருடர்களுக்கு எச்சரிப்பது போல இருப்பதால் போலீஸார் சைரன் ஒலி இன்றி மோட்டார்சைக்கிளில் சென்றால் திருடர்களை பிடிப்பது எளிதாகும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.