உரிய நேரத்தில் அதிகாரிகள் வராததால் தாலுகா அலுவலகத்துக்கு பூட்டு
வருவாய்த் துறை அதிகாரிகள் உரிய நேரத்தில் வேலைக்கு வராததால் கொதிப்படைந்த பொதுமக்கள் உழவர்கரை தாலுகா அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை பூட்டு போட்டு போராட்டம் செய்தனர்.
வருவாய்த் துறை அதிகாரிகள் உரிய நேரத்தில் வேலைக்கு வராததால் கொதிப்படைந்த பொதுமக்கள் உழவர்கரை தாலுகா அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை பூட்டு போட்டு போராட்டம் செய்தனர்.
உழவர்கரை தாலுகா அலுவலகம் கிழக்கு கடற்கரைச் சாலையில் உளளது. இந்நிலையில் தாலுகா அலுவலகத்துக்கு வட்டாட்சியர் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் சரிவர பணிக்கு வராத காரணத்தால் மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் ரேஷன் அட்டை, அரசின் நலத்திட்டங்கள் பெறுவதற்கான இருப்பிடம், வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்கள் கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாவதாகவும், அப்படியே அதிகாரிகள் வந்தாலும் உரிய காரணம் கூறாமல் பொதுமக்களையும் அலைக்கழிப்பதாகவும் அப்பகுதி மக்கள் புகார் கூறி வந்தனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமையும் வட்டாட்சியர் உட்பட அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலக வாயிலை பூட்டுப் போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் அலுவலகம் செயல்பட முடியாமல் பாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த வருவாய்துறை அதிகாரிகள் இனி இதுபோன்று நடைபெறாது என்றும், சான்றிதழ்கள் உரிய நேரத்தில் வழங்கப்படும் என்றும் உறுதி கூறினர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.