முகப்பு
தற்போதைய செய்திகள்

பிப்.8-ல் சிதம்பரம் அனந்தீஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம்: பந்தகால் முகூர்த்தம்

பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஸ்ரீஅனந்தீஸ்வரன் கோயில் 43 ஆண்டுகளுக்கு பிறகு இந்து சமய அறநிலையத்துறையினரால் ரூ.70 லட்சம் செலவில் திருப்பணி செய்யப்பட்டு, வருகிற பிப்.8-ம் தேதி

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:22 AM
பகிர்:

பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஸ்ரீஅனந்தீஸ்வரன் கோயில் 43 ஆண்டுகளுக்கு பிறகு இந்து சமய அறநிலையத்துறையினரால் ரூ.70 லட்சம் செலவில் திருப்பணி செய்யப்பட்டு, வருகிற பிப்.8-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யபப்ட்டுள்ளது. இதற்கான பந்தகால் முகூர்த்தம் கோயில் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

பதஞ்சலி முனிவரால் ஸ்தாபிக்கப் பெற்ற இறைவன் இங்கு எழுந்தருளியிருப்பதால் இக்கோயில் அனந்தீஸ்வரம் கோயில் எனப் பெயர் பெற்றது.  இக்கோயிலில் உள்ள இறைவன் பெயர் ஸ்ரீஅனந்தீஸ்வரர், இறைவி பெயர் ஸ்ரீசெளந்தரநாயகி. இக்கோயிலில் பதஞ்சலி முனிவர் பாதி மனித வடிவமாகவும், பாதி பாம்பு வடிவம் பெற்றுள்ளார். இவர் அனுக்கிரக மூர்த்தியாக கோயிலில் காட்சியளிக்கிறார். பதஞ்சலி மாமுனிவர் ஆன்மார்த்தமாக பூசனை புரிந்த நாகக்சேரி குளக்கரை அருகே இக்கோயில் அமைந்துள்ளது.

ஒரு காலத்தில் திருமாலின் படுக்கையாகிய ஆதிசேடன் திருமாலின் பேரானந்த நிலைக்கு காரணமாக அமைந்தது சிவபெருமானின் கூத்தேயாகும். தில்லைத் திருநடனத்தை காண அத்திரி முனிவருக்கும், அநசூயைக்கும் மகனாய் தோன்றி தவம் செய்து பாதி மனித உருவமும், பாதி பாம்பு வடிவமும் கொண்டு தில்லையில் வியாக்கிரபாதருக்கு நண்பராகி திருமூலட்டநாதரை வழிபட்டு வரும் போது அம்பலவாணனாகிய ஸ்ரீநடராஜப் பெருமானின் அருள் நடனம் காட்சி பெற்றதை பதஞ்சலிக்கு அருளிய பரமநாடக என்ற திருவாசக பாடல் மூலம் அறியலாம். இக்கோயில் 1970-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருப்பணி செய்யப்பட்டு குடமுழக்கு செய்யப்பட்டுள்ளது.

இப்பிரசித்தி பெற்ற ஸ்ரீஅனந்தீஸ்வரர் கோயில் 43 ஆண்டுகளுக்கு பிறகு இந்து சமய அறநிலையத்துறையினரால் சுமார் ரூ.70 லட்சம் செலவில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. கோயிலில் உள்ள அனைத்து சந்திதிகளும் பழுதுபார்த்து புதுப்பித்தல், மேல்தளம் பழுது பார்த்து புதுப்பித்தல், திருமால் பத்தி, உள்மதில் சுவர், மடப்பள்ளி ஆகியவை பழுது பார்த்து புதுப்பித்தல், அலங்கார மண்டம் வெளி அறைகள் பழுதுபார்த்து புதுப்பித்தல், வெளிமதிர்சுவர்கள் திரும்பக்கட்டுதல், உள் பிரகாரம் தளம் அமைத்தல் உள்ளிட்ட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் வளாகத்தில் யாகசாலை அமைப்பதற்கான பந்தகால் முகூர்த்தம் புதன்கிழமை நடைபெற்றது.  திருப்பணிக்குழுத் தலைவர் டாக்டர் ஆர்.கே.நடராஜன், கோயில் செயல்அலுவலர் முருகன், நகரமன்ற துணைத் தலைவரும், அதிமுக நகரச் செயலாளரருமான ரா.செந்தில்குமார், அரிமா கே.சேதுமாதவன், மூத்த நகரமன்ற உறுப்பினர் ஆ.ரமேஷ், சிதம்பரம் நகர கூட்டுறவு வங்கித் தலைவர் சொ.ஜவகர், கே.ஆர்.ஜி.சாமிநாதன், கருப்பு ராஜா. கோயில் அலுவலர்கள் முருகன், வாசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.