பழனி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பேருந்து நிலையம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள்: மாவட்ட ஆட்சியர்
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தைப்பூசத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து வியாழக்கிழமை அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் பழனியாண்டவர் கலை
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தைப்பூசத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து வியாழக்கிழமை அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் பழனியாண்டவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடைபெற்றது.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உலக அளவில் ஆன்மீக தலமாக விளங்கும் இடமாகும். பழனி கோயிலுக்கு நாளுக்கு நாள் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வந்து செல்கின்றனர். பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலில் இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழா 28.01.2015 கொடியேற்றத்துடன் தொடங்கி திருக்கல்யாணம், வௌ்ளிரதம், தைப்பூசம் திருத்தேர்களுடன் தைப்பூசத் திருவிழா 06.02.2015 அன்றுடன் முடிவடைகிறது. தைப்பூச திருவிழாவை சிறப்பான முறையில் நடத்தி முடித்திட இந்து சமய அறநிலையத்துறை, காவல்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, போக்குவரத்துத்துறை, மருத்துவத்துறை, தீயணைப்புத்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவர்களுடனான விழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் பழனியாண்டவர் கல்லூரி வழிபாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாவட்ட எஸ்பி., சரவணன், எம்எல்ஏ., வேணுகோபாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:-
பழனிக்கு வந்து செல்லும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான தண்ணீர் வசதி, கழிப்பறை வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக கிடைக்க செய்யும் வகையில் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் மூலம் பக்தர்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, தற்பொழுது பழனி திருக்கோவிலைச் சுற்றிலும் 70 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவற்றை மேலும் விரிவுபடுத்தி பேருந்து நிலையம், கிரிவலப் பாதைகள் உள்ளிட்ட முக்கிப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மருத்துவத்துறையினர் மூலம் பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு, மலைக் கோவில், அடிவாரம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு தேவையான அளவு மருந்து, மாத்திரைகள், ஆம்புலன்ஸ் சேவைகள் உள்ளிட்டவைகளை தயார் நிலையில் வைத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், உணவு பாதுகாப்பு ஆய்வாளார்கள் மூலம் காலாவதியான பொருட்களை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்கும் வகையில் பழனிக்கு வரும் அனைத்து பேருந்துகளிலும் துணிப்பைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு வில்லைகள் ஒட்டப்படும். தவிர வழிகாட்டிகளை வரன்முறை செய்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பழனி கோவில் அடிவாரம் முதல் பேருந்து நிலையம் வரை பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதயாத்திரை வரும் பக்தா;களுக்கு சாலையில் கற்கள் மற்றும் கண்ணாடி பொருட்கள் இல்லாத வகையில் தினந்தோறும் அந்தந்த பகுதியில் உள்ள பஞ்சாயத்துகள் மூலம் சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. விழா நடைபெறும் பத்து நாட்களும் தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் பழனி கோட்டாட்சியர் கீதா, பழனி நகர்மன்றத் தலைவர் வேலுமணி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்(பொறுப்பு) ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா, நகர் மன்றத் துணைத் தலைவர் முருகானந்தம், நகராட்சி ஆணையர் முஜிபுர்ரகுமான், டிஎஸ்பி., சண்முகசுந்தரம், பழனி ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் செல்லச்சாமி உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.