நெல்லையில் ரயில்வே பணியாளர்கள் போட்டி ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலியில் திங்கள்கிழமை ரயில்வேத்துறையில் நேரடி அன்னிய முதலீட்டை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தென்னக ரயில்வே மஸ்தூர் ஊழியர்கள் சங்கமும், தொழிலாளர் விரோதப் போக்கை
திருநெல்வேலியில் திங்கள்கிழமை ரயில்வேத்துறையில் நேரடி அன்னிய முதலீட்டை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தென்னக ரயில்வே மஸ்தூர் ஊழியர்கள் சங்கமும், தொழிலாளர் விரோதப் போக்கை கடைபிடிக்கும் அதிகாரிகளை கண்டித்து எஸ்.சி, எஸ்.டி. ரயில்வே ஊழியர்கள் சங்கமும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
ரயில்வேத்துறையில் நேரடி அன்னிய முதலீட்டை மத்திய அரசு கைவிட வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ரயில்வே ஊழியர்கள் பெற்று வரும் அகவிலைப்படியில் 100 சதவீதத்தை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டும். மேலும் 25 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில்திருநெல்வேலியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சந்திப்பு புதிய ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மதுரை கோட்ட துணைச் செயலர் சுப்பையா தலைமை வகித்தார். திருநெல்வேலி கிளைத் தலைவர் வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். அமைப்பின் மதுரை கோட்டத் தலைவர் ராமசுப்பு, துணைத் தலைவர் ரவிச்சந்திரன், தூத்துக்குடி கிளைத் தலைவர் காந்திசேகர், திருநெல்வேலி கிளைச் செயலர் ஐயப்பன், நிர்வாகிகள் முருகன், சுவாமிதாஸ் மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து 200 க்கும் மேற்பட்ட ரயில்வே பணியாளர்கள் பங்கேற்றனர்.
மற்றொரு ஆர்ப்பாட்டம்: எஸ்.சி, எஸ்.டி ரயில்வே ஊழியர்களின் நலனுக்கு எதிராக செயல்படும் ரயில்வே அதிகாரிகள், அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு துணை நிற்கும் ரயில்வே ஊழியர் அமைப்பின் நடவடிக்கையை கண்டித்தும் சந்திப்பு பழைய ரயில் நிலையம் முன்பு எஸ்.சி. எஸ்.டி. ரயில்வே ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் திருநெல்வேலி கிளைத் தலைவர் பி. செல்லையாதலைமை வகித்தார். கிளைச் செயலர் ஏ. சிவபெருமாள் முன்னிலை வகித்தார். அமைப்பின் மதுரை கோட்டச் செயலர் கே. அலெக்ஸாண்டர், கோட்டப் பொருளாளர் எஸ். ஜெயராஜ், கோட்ட உதவித் தலைவர் கே. தியாகராஜன், கோட்ட அமைப்புச் செயலர் ஏ. ராஜா, துணைச் செயலர் ஆர். இசக்கிதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கோரிக்கையை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் எம்.சி. கார்த்திக், புதிய தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலர் எம்.எஸ். செல்லப்பா, பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டத் தலைவர் தி. தேவந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.