குவைத்தில் சித்ரவதைக்குள்ளாகி தவிக்கும் மகனை மீட்டுத்தரக்கோரி கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் தந்தை மனு!
கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி அருகே உள்ள ஆதிவராகநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடாசலபதி (53). பரங்கிப்பேட்டையில் தபால்காரராக பணியாற்றி வருகிறார். இவரது ஒரே மகன்
குவைத் இந்திய தூதரகத்தில் தவிக்கும் மகனை மீட்டுத்தருமாறு அவரது தந்தை கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமாரிடம் மனு ஒன்று அளித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி அருகே உள்ள ஆதிவராகநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடாசலபதி (53). பரங்கிப்பேட்டையில் தபால்காரராக பணியாற்றி வருகிறார். இவரது ஒரே மகன் கோகுல் (26), ஐடிஐ முடித்து விட்டு கடந்த ஆண்டு 24-4-2014 அன்று வீட்டு வேலைக்காக குவைத் நாட்டுக்கு சென்றார். ரூ.12 ஆயிரம் மாத சம்பளத்தில் அங்குள்ள ஷேக் வீட்டில் வேலைக்கு சேர்ந்தார். 3 மாதத்திற்கு பின்னர் அவர் என்ன ஆனார் என தெரியவில்லை. அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் பெற்றோருக்கு போனில் தொடர்பு கொண்ட கோகுல், தனது முதலாளி தினமும் தன்னை அடித்து சித்ரவதை செய்வதாக கதறி அழுதுள்ளார். மேலும் அங்கிருந்து தப்பி இந்திய தூதரகத்தில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். தன்னைப்போலவே 100-க்கும் மேற்பட்டோர் தஞ்சமடைந்துள்ளதாகவும், தனது பாஸ்போர்ட்டை முதலாளி பறித்துக்கொண்டதாகவும், ஊர் திரும்ப முடியாமல் தவிப்பதாகவும், இந்திய அரசின் மூலம் தன்னை மீட்குமாறும் கூறி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலரிடம், வெங்கடாசலபதி மனு அளித்தார். அதில் குவைத் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் தவிக்கும் தனது மகன் கோகுலை மீட்டுத்தருமாறும், தனது மனைவி உடல் நலக்குறைவால் அவதிப்படுவதாகவும், மீட்பு நடவடிக்கையை உடனே தொடங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்ததையடுத்து வெங்கடாசலபதி மற்றும் உறவினர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.