முகப்பு
தற்போதைய செய்திகள்

பழனியில் காவல் நிலையங்களில் போலி வழக்கறிஞர்களை வைத்து கட்டப்பஞ்சாயத்து - வழக்கறிஞர்கள் சங்கம் புகார்

பழனியில் காவல் நிலையங்களில் போலி வழக்கறிஞர்களை வைத்து நடைபெறும் கட்டப்பஞ்சாயத்து குறித்து காவல்துறை நடவடிக்கை இல்லாத நிலையில் முற்றுகை போராட்டம், நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும் என பழனி வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.    

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:29 AM
பகிர்:

பழனியில் காவல் நிலையங்களில் போலி வழக்கறிஞர்களை வைத்து நடைபெறும் கட்டப்பஞ்சாயத்து குறித்து காவல்துறை நடவடிக்கை இல்லாத நிலையில் முற்றுகை போராட்டம், நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும் என பழனி வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.   

கோயில் நகரான பழனியில் நாளுக்கு நாள் போலிகளின் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில் காவல்துறையினரிடம் பல்வேறு தரப்பினரும் புகார் செய்தும் நடவடிக்கை இல்லாத நிலை நீடித்து வருகிறது. பழனி நகரில் திரும்பும் இடத்தில் எல்லாம் வாகனங்களில் பிரஸ், போலீஸ், அட்வகேட் என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட வாகனங்களே செல்கிறது. 

கடந்த சில தினங்களுக்கு முன் பழனி-திண்டுக்கல் சாலையில் மோட்டார்சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்த நிலையில் மோதிய மோட்டார்சைக்கிளை அப்படியே விட்டு விட்டு எதிரி தப்பிவிட்டார். அந்த மோட்டார்சைக்கிளில் பிரஸ் என எழுதப்பட்டிருந்தது. அதே போல போலீஸ் என எழுதப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் அத்துமீறி மூன்றுபேர், ஐந்து பேர் பயணம் செய்கின்றனர். நீதிபதி ஒருவர் வந்த போது அவர் முன்னிலையிலேயே மினிவேன் ஒன்றில் அட்வகேட் சின்னம் பொறிக்கப்பட்டதை வழக்கறிஞர்கள் பலரும் கண்டித்துள்ளனர். இந்நிலையில் பழனி நீதிமன்றத்திற்கு தினமும் வழக்கறிஞர் என்ற பெயரில் சில நபர்கள் வந்து ஆஜராவது, வழக்கறிஞர்கள் சங்க அலுவலகத்தில் அமர்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதை வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் கண்டித்துள்ளனர். இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர் ஆகியோருக்கும் புகார் செய்துள்ளனர். 

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் சனிக்கிழமை இதுகுறித்து நடைபெற்ற கூட்டத்தில் பழனி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சிவக்குமார், துணைத் தலைவர் செந்தில்குமார், செயலாளர் கோபிநாத், பொருளாளர் தினேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் செயலாளர் கோபிநாத் தெரிவித்ததாவது, பழனி நீதிமன்ற வளாகத்தில் வரும் போலி வழக்கறிஞர்கள் சங்க அலுவலகத்தில் வருவதை தடுத்த போது அவர்கள் மிரட்டிவிட்டு சென்றுள்ளனர். 

இவர்கள் குறித்து பெயர், வாகனத்தின் எண்களும் எழுதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளருக்கு புகார் செய்தும் இதுவரை புகாரை பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதைவிட பழனி நகர், தாலுகா காவல் நிலையத்தில் இவர்களை வைத்தே விசாரணைகளை ஆய்வாளர்கள் மேற்கொள்கின்றனர். வழக்கு பதிவு செய்வதை விட இவர்களை வைத்து பஞ்சாயத்து செய்வதை போலீஸார் தொடர்நடவடிக்கையாக மேற்கொள்கின்றனர். 

புகார்தாரரின் புகாரை வைத்து நடவடிக்கை எடுக்காமல் போலி வழக்கறிஞர்கள் சொல்வதை செய்கின்றனர். இதனால் பொதுமக்கள் நிலை கேள்விக்குறியாக உள்ளது. ஆகவே, பழனி வழக்கறிஞர்கள் சங்கம் கொடுத்த புகாரின் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காத நிலையில் விரைவில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் மற்றும் காவல்துறை முற்றுகை போராட்டம் போன்றவற்றை சங்க நிர்வாகிகள் எடுக்க முடிவு செய்துள்ளோம் என தெரிவித்தனர். இதுகுறித்து பழனி டிஎஸ்பி., சண்முகசுந்தரத்திடம் கேட்டபோது, இதுவரை தனக்கு இது தொடர்பாக வழக்கறிஞர்கள் எந்த புகாரும் தரவில்லை, தன்னிடம் கொடுத்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.