கும்பாபிஷேகம் மதரீதியான சடங்கு, திருப்பணி கிடையாது: நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்களின் செயளாளர்
நடராஜர் கோயிலில் நடைபெறவுள்ள கும்பாபிஷேகம் முழுவதுமாக மதரீதியான சடங்கு தவிர திருப்பணி கிடையாது. திருப்பணி கமிட்டி அமைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது என பொதுதீட்சிதர்களின் செயலாளர் ஆர்.பாஸ்கரதீட்சிதர் தெரிவித்துள்ளார்.
நடராஜர் கோயிலில் நடைபெறவுள்ள கும்பாபிஷேகம் முழுவதுமாக மதரீதியான சடங்கு தவிர திருப்பணி கிடையாது. திருப்பணி கமிட்டி அமைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது என பொதுதீட்சிதர்களின் செயலாளர் ஆர்.பாஸ்கரதீட்சிதர் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு திருப்பணி கமிட்டி அமைக்க வேண்டும் என ஆர்.யு.கனகசபேச தீட்சிதர் சிதம்பரம் உதவிஆட்சியரிடம் மனு அளித்திருந்தார். மனு குறித்து விளக்க அறிக்கையினை பிப்.8-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என பொதுதீட்சிதர்களின் செயலாளருக்கு, சிதம்பரம் உதவிஆட்சியர் எம்.அரவிந்த் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் பொதுதீட்சிதர்களின் செயலாளர் ஆர்.பாஸ்கர தீட்சிதர் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி விபரம்: நடராஜர் கோயில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தியின் மகாகும்பாபிஷேகம் மே.1-ம் தேதி ஆன்மீக அன்பர்கள் பேராதரவோடு, உலக நன்மைக்காக நடைபெற உள்ளது. நடைபெறவுள்ள மகாகும்பாபிஷேகம் முழுமையான மதரீதியான சடங்குகளுடன் நடைபெறும் வைபவமாகும். தற்போது நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்காக கோயிலில் எவ்வித திருப்பணியோ, கட்டடம் செப்பணியிடுதலோ நடைபெறவில்லை. சீரமைக்கப்பட்டு வர்ணம் மட்டும் பூசப்படுகிறது.
பொதுதீட்சிதர்களின் தீர்மானம் அடிப்படையில் திருவுளச்சீட்டு எடுத்து கும்பாபிஷேக ஆச்சாரியார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த ஆச்சாரியார்கள் யாகசாலை, பூஜை முறைகள், கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை கட்டளைகாரர்கள் உபயத்துடன் நடத்துகின்றனர். கோயில் சட்டம் இதுவரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. திருப்பணிக்கமிட்டி என்பது கோயில் கும்பாபிஷேகத்திற்கு முன் திருப்பணி நடைபெற்றால்தான் தேவைப்படும்.
கோயில் சட்டம் 367-ன்படி தீட்சிதர்கள் உபயதாரர்கள் மூலம் திருப்பணி செய்ய வேண்டும் என உள்ளது. திருப்பணி நன்கொடையாக பணம் வாங்கப்படாமல், உபயதாரர்கள் மூலம் பொருட்களாக வாங்கி செய்யப்படுகிறது. யாரிடமும் நன்கொடை வாங்கப்படவில்லை. பொதுதீட்சிதர்கள் சிலர் தனிப்பட்ட மனவருத்தத்தை மனதில் வைத்துக் கொண்டு பொதுதீட்சிதர்களுக்கு களங்கம் ஏற்படும் வகையில் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர்.
கோயிலில் கால பைரவர் அபிஷேகம், ருத்ராபிஷேகம் ஆகியவற்றின் கட்டணங்களுக்கு காலத்திற்கு ஏற்ப பொதுதீட்சிதர்களின் ஆலோசனையின் பேரில் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நாட்டியாஞ்சலியை பொதுதீட்சிதர்கள் சார்பில் நடத்தப்படுகிறது. ஏற்கனவே நடத்திய நாட்டியாஞ்சலி அறக்கட்டளை நாட்டியாஞ்சலி நடத்த அனுமதி கோரினர். அவர்களிடம் நாங்களே நடத்தப்போவதாக தெரிவித்துள்ளோம் என ஆர்.பாஸ்கர தீட்சிதர் தெரிவித்தார்.