நெல்லை அருகே குளத்துக்குள் பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 பேர் காயம்
திருநெல்வேலி அருகே குளத்துக்குள் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மாணவர்கள் உள்பட 20 பேர் பலத்த காயமடைந்தனர்.
திருநெல்வேலி அருகே குளத்துக்குள் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மாணவர்கள் உள்பட 20 பேர் பலத்த காயமடைந்தனர்.
திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து வீரளபெருஞ்செல்வி கிராமத்துக்கு திங்கள்கிழமை காலையில் அரசு பேருந்து புறப்பட்டு சென்றது. பின்னர் அங்கிருந்து பேருந்து மீண்டும் புறப்பட்டு கொங்கந்தான்பாறை வழியாக திருநெல்வேலி சந்திப்பு நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தை தச்சநல்லூர் அருகேயுள்ள தேனீர்குளத்தைச் சேர்ந்த சிவகுமார் (39) ஓட்டினார்.
கொங்கந்தான்பாறை அருகே குளத்தின் கரையில் பேருந்து வந்து கொண்டிருந்தபோது பட்டை உடைந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகே குளத்தின் பள்ளத்துக்குள் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கொங்கந்தான்பாறையைச் சேர்ந்த மாணவிகள் ஷாலு (14), பிரியா (13), சந்தியா(14), சிவகுமார், முத்துராஜ் (26), புதுக்குளத்தைச் சேர்ந்த தேவஇரக்கம் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.