முகப்பு
தற்போதைய செய்திகள்

இரட்டை கொலை வழக்கு: நிரபராதிகளை கைது செய்த காவல் ஆய்வாளர் தாற்காலிக பணிநீக்கம்

தூத்துக்குடியில் கடந்த 2013 ஆம் ஆண்டு நிகழ்ந்த இரட்டை கொலை வழக்கில் தொடர்பில்லாதவர்கள் நால்வரை கைது செய்ததாக காவல் ஆய்வாளர் செல்வம் புதன்கிழமை தாற்காலிக பணிநீக்கம் செய்யபப்பட்டார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:47 AM
பகிர்:

தூத்துக்குடியில் கடந்த 2013 ஆம் ஆண்டு நிகழ்ந்த இரட்டை கொலை வழக்கில் தொடர்பில்லாதவர்கள் நால்வரை கைது செய்ததாக காவல் ஆய்வாளர் செல்வம் புதன்கிழமை தாற்காலிக பணிநீக்கம் செய்யபப்பட்டார்.

தூத்துக்குடி அருகேயுள்ள வர்த்தகரெட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் அந்தோணி பாண்டியன் (41). நிலத்தரகரான இவர் அதே பகுதியில் புதிய வீடு கட்டி வந்தார். இந்நிலையில்,  அந்தோணி பாண்டியனும்,  அவருக்கு உதவியாக கட்டுமானப் பணிகளை கண்காணித்து வந்த நாகர்கோவில் அருகேயுள்ள  வெள்ளப்பாறைவிளையைச் சேர்ந்த ஷியாம் குமாரும் (26) கடந்த 29.10.2013 இல் புதிய வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த தட்டப்பாறை போலீஸார்  வாகைகுளம் பகுதியைச் சேர்ந்த ஜேசுதாசன், வரதராஜன், சுடலைமுத்து, பரமசிவம் ஆகிய நால்வரையும் மறுநாளே கைது செய்தனர். நிலத்தகராறு தொடர்பாக கொலை நிகழ்ந்ததாக போலீஸார் கூறினர்.

இந்நிலையில், கைதான நால்வரும் உண்மை குற்றவாளிகள் தாங்கள் இல்லை என்றுக் கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில்,  இரட்டை கொலை வழக்குத் தொடர்பாக வர்த்தகரெட்டிபட்டியைச் சேர்ந்த உலகநாதன், மணி, முருகேசன், ராஜன் உள்ளிட்டோரை தட்டப்பாறை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அவர்கள் அளித்த தகவலின்பேரில் வர்த்தகரெட்டிபட்டியில் உள்ள ஒரு கிணற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்தப் பிரச்னையில் வழக்கில் தொடர்பில்லாத நால்வரை கைது செய்த விசாரணை அதிகாரிகளான காவல் ஆய்வாளர் செல்வம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதுதொடர்பாக, காவல் துறை உயர் அதிகாரிகள் ரகசிய விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணை அறிக்கை திருநெல்வேலி சரக டிஐஜி முருகனிடம் தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், அப்போதைய விசாரணை அதிகாரியும், தற்போது நாசரேத் காவல் ஆய்வாளருமான செல்வத்தை தாற்காலிக பணிநீக்கம் செய்து டிஐஜி முருகன்  உத்தரவிட்டார். இந்த உத்தரவு காவல் ஆய்வாளர் செல்வத்திடம் புதன்கிழமை வழங்கப்பட்டது. இதுதொடர்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸிடம் கேட்டபோது, இரட்டை கொலை வழக்கில் தவறான விசாரணை மேற்கொண்டு வழக்கில் தொடர்பில்லாத நால்வரை கைது செய்த சம்பவத்துக்காக காவல் ஆய்வாளர் செல்வம் தாற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.