முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை: கேரள அரசை கண்டித்து தமிழர் உரிமை மீட்புக்குழு உண்ணாவிரதம்
முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசை கண்டித்து தமிழர் உரிமை மீட்புக்குழு சார்பில் கம்பம் வ.ஊ.சி திடலில் உண்ணாநிலை அறப்போர் சனிக்கிழமை
முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசை கண்டித்து தமிழர் உரிமை மீட்புக்குழு சார்பில் கம்பம் வ.ஊ.சி திடலில் உண்ணாநிலை அறப்போர் சனிக்கிழமை நடைபெற்றது.
கேரளா அரசை கண்டித்து கம்பத்தில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்ட நிகழ்ச்சிக்கு தமிழர் உரிமை மீட்புக் குழு தலைவர் இளங்குமரன் தலைமை தாங்கினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழ்வாணன், தமிழர் தேசியக் கட்சி மாநிலத் தலைவர் தீன் அப்துல்லா, அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாவட்ட தலைவர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்.டி.பி.ஐ மாநில துணை தலைவர் ரபீக் அகமது துவக்க உரை ஆற்றினார். நிகழ்ச்சியில் தமிழர் உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் உரையாற்றினார்.
அன்வர் பாலசிங்கம் பேசியதாவது:-
1979ஆம் ஆண்டு அச்சுதமேனன் கேரளத்தின் முதல்வராக இருந்த காலத்தில் இருந்து இன்று வரை, கடந்த 35 ஆண்டுகாலங்களாக கேரளாவில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பெரியாறு அணை பலவீனமாக இருக்கின்றது, அதனை உடைக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். கம்பம் பகுதியில் 2011-ல் ஏற்பட்ட மாபெரும் மக்கள் எழுச்சி போராட்டத்தின் விளைவாக அணை பலவீனமாக இருக்கின்றது என்ற சொல்லை மாற்றிவிட்டு தற்போது, முல்லைப்பெரியார் அணை அருகே புதிய அணை கட்டப்போவதாக சொல்லி அணையின் இருந்து 336 மீட்டர் தொலைவில் கீழ் பகுதியில் புதிய அணைக்கான மண்மாதிரி ஆய்வுகளை எடுத்துள்ளனர்.
மண் மாதிரிகளை ஆய்வகத்திற்க்கு அனுப்பி வைத்துள்ளார்கள். பரிசோதனையில் மண் பலமாக இருக்கின்றது அணை கட்டலாம் என்று சொன்னால் புதிய அணை கட்ட தயங்க மாட்டார்கள். புதிய அணை கட்டினால் தமிழத்தில் உள்ள இரண்டு லட்சத்து நாற்பது ஆயிரம் ஏக்கர் விவிசாய நிலம் ஒரே நாளில் பாலை வனம் ஆகப்போவதை விட ஐந்து மாவட்டத்தில் உள்ள ஒரு கோடி மக்கள் குடிக்க கூடிய குடி நீர் ஆதாரம் வீணாகிபோய்விடும் என்ற கவலை தமிழர் உரிமை மீட்புக்குழுவிற்க்கு இருக்கிறது.
தமிழக மக்களின் உணர்வை புரிந்து கொள்ளவில்லை என்றால் மீண்டும் 2011-ல் ஏற்பட்ட போராட்டத்தை விட மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும். மேலும் தமிழகத்தில் இருக்ககூடிய 40 லட்சத்திற்க்கும் மேல் மலையாளிகளுக்கு சொந்தமான சொத்துக்கள் என்னவாகும் என்பது கேள்விக்குறியாகிவிடும். ஆகவே கேரள அரசு மனிதாபிமான என்னத்துடன் நடந்து கொண்டு அணை கட்டுவதை கைவிட வேண்டும். இதை வலியுறுத்தவே இந்த ஒரு நாள் உண்ணாநிலை அறப்போர் நடைபெறுகிறது என்றார்.
இந்த உண்ணா நிலை போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட தமிழர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.