முல்லைப் பெரியாறு அணையில் தொடர் மழையால் நீர்மட்டம் உயர்வு
முல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சிலநாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து
முல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சிலநாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
முல்லைப் பெரியாறு அணையில் தொடர்மழையால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் வெள்ளிக்கிழமை வினாடிக்கு 3,838 கனஅடியாக இருந்த நீர்வரத்து இருந்தது. சனிக்கிழமை 5,948 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் 123.20 அடியாக இருந்த முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை மட்டும் ஒரே நாளில் 3 அடி அதிகரித்து 126.10 அடியாக உயர்ந்துள்ளது.
கடந்த ஜூன் 2-ந்தேதி முதல் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முதல் போக பாசனத்திற்காக அணையிலிருந்து வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. சனிக்கிழமை காலையிலிருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவினை 400 கன அடியிலிருந்து வினாடிக்கு 1,000 கன அடியாக திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.வெள்ளி மாலை நிலவரப்படி 152 அடி உயரமுள்ள பெரியாறு அணையின் நீர்மட்டம் 126.10 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,948 கனஅடியாகவும் இருந்தது. அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் மொத்த நீர் இருப்பு 3,704 மில்லியன் கன அடியாக உள்ளது.
71 அடி உயரமுள்ள வைகையின் நீர்மட்டம் 44.52 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 232 கனஅடியாக இருந்தது. அணையிலிருந்து நீர்வெளியேற்றம் வினாடிக்கு 60 கனஅடியாகவும், அணையின் இருப்புநீர் 1,384 மில்லியன் கனஅடியாகவும் உள்ளது.
மழை அளவு பதிவு:-
பெரியாறு 75 மி.மீ, தேக்கடி 39 மி.மீ, கூடலூர் 13 மி.மீ, சண்முகாநதி 5 மி.மீ, உத்தமபாளையம் 9 மி.மீ, வீரபாண்டி 4 மி.மீ, வைகை 8.7 மி.மீ, மஞ்சளாறு 3மி.மீ, சோத்தப்பாறை 8 மி.மீ, கொடைக்கானல் 2 மி.மீ, மழை அளவும் பதிவாகி இருந்தது.
லோயர்கேம்ப் மின் உற்பத்தி கூடுதல் மின் உற்பத்தி துவக்கம்:-
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு திறக்கப்பட்டு வந்த 400 கனஅடி தண்ணீர் மூலம் லோயர்கேம்பிலுள்ள பெரியாறு நீர் மின் உற்பத்தி நிலையத்தில் ஒரு ஜெனரேட்டர் மூலம் 32 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், தண்ணீர் திறப்பு 400 அடியிலிருந்து 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டதால், மின் உற்பத்தி நிலையத்திலுள்ள மூன்று ஜெனரேட்டர்கள் மூலம் 90 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.