அண்ணாமலைப் பல்கலை. தமிழியல்துறை உள்கட்டமைப்பு வலுப்படுத்தப்படும்: நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக முதுகலை செம்மொழித்தமிழ் பட்டவகுப்பு தமிழியல்துறையின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது உள்ளிட்ட வளர்ச்சி பணிகளுக்கு பல்கலைக்கழக நிர்வாகம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக முதுகலை செம்மொழித்தமிழ் பட்டவகுப்பு தமிழியல்துறையின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது உள்ளிட்ட வளர்ச்சி பணிகளுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் துணைநிற்கும் என பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா தெரிவித்தார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல்துறையும், மைசூர் இந்திய மொழிகள் நடுவண் நிறுவனமும் இணைந்து சங்க இலக்கிய பெண்பாற் புலவர் பாடல்கள் மொழிநடை-மதிப்பீடு என்ற பொருளில் இருநாள் கருத்தரங்கு தொடக்கவிழா வெளஅளிக்கிழமை நடைபெற்றது.
தமிழியல்துறை தலைவர் முனைவர் அரங்க.பாரி தலைமை வகித்தார். மொழிப்புல முதல்வர் முனைவர் வி.திருவள்ளுவன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் செ.கல்பனா வரவேற்றார். விழாவில் பல்கலைக்கழக நிர்வாகியும், தமிழகஅரசு முதன்மை செயலருமான ஷிவ்தாஸ்மீனா பங்கேற்று கருத்தரங்கு கட்டுரை தொகுப்பு நூலை வெளியிட்டு வாழ்த்துரையாற்றினார். அவர் பேசியதாவது:
மீனாட்சி கல்லூரி தொடங்கி இன்று வரை பழமையும், பெருமையும் வாய்ந்த துறையாக தமிழியல்துறை விளங்குகிறது. காலமாற்றத்திற்கு ஏற்ப தமிழியல்துறையின் பாடத்திட்டம், தமிழ் ஆய்வுகள், துறையின் உள்கட்டமைப்பு நவீனப்படுத்துவதுடன், புதிய பாட வகுப்புகளும் தொடங்கப்பட வேண்டும். மத்தியஅரசு செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் உதவித்தொகையுடன் கூடிய முதுகலை செம்மொழித் தமிழ் பட்ட வகுப்பு அடுத்த கல்வி ஆண்டில் தொடங்கப்படும். இதற்கான பாடத்திட்டம் வடிவமைத்தல் பணிகளை தமிழ்த்துறை விரைந்து செய்ய வேண்டும் என ஷிவ்தாஸ்மீனா
தெரிவித்தார்.
சென்னை பல்கலைக்கழக இலக்கியத்துறை முன்னாள் தலைவர் வி.அரசு பங்கேற்று கருத்துரையாற்றினார். அவர் பேசியதாவது:
சங்க பெண்பாற் புலவர் பாடல்கள் இன்னும ஆழமாக ஆய்வு செய்யப்படவேண்டும். தலைவன், தலைவி கூற்று முறைகள் விடவும், இயற்கையான பாடல் புனைவுகள் சங்க இலக்கியத்தில் அதிகம் காணப்படுகின்றன. விழாவில் முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் முனைவர் த.ராசவன்னியன், தொழிலதிபர் கே.சேதுமாதவன், தொலைதூரக்கல்வி இயக்கக தமிழ்ப்பிரிவு தலைவர் முனைவர் ந.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இணை ஒருங்கிணைப்பாளர் எம்.ஆர்.தேவகி நன்றி கூறினார்.