முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் பன்றி காய்ச்சல் நோய் குறித்து அரசு நடவடிக்கை இல்லை: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

தமிழகத்தில் பன்றி காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. அரசு நடவடிக்கை இல்லை என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், கடலூர் மாவட்ட திமுக செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:58 AM
பகிர்:

தமிழகத்தில் பன்றி காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. அரசு நடவடிக்கை இல்லை என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், கடலூர் மாவட்ட திமுக செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை அவர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

நிலம் கையக்கபடுத்தும் சட்டத்தை கைவிடக்கோரியும், வேளாண்துறை அதிகாரி தற்கொலைக்கு காரணமான அமைச்சரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகிற மார்ச் 20-ம் தேதி கடலூரில் திமுக சார்பில் ஆக்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என அனைத்து எதிர்கட்சிகளும் கூறுகின்றன.  தூத்துக்குடி, திருநெல்வேல் மாவட்ட டிஐஜி, எஸ்பி உள்ளிட்டோர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுளளது அதற்கு உதாரணமாகும். தமிழகத்தில் பன்றி காய்ச்சல் நோயினால் மக்கள் பயந்து வாழுகின்றனர்.

கருணாநிதி முதல்வராக இருந்தபோது பன்றி காய்ச்சல் நோய்க்கு மாவட்ட தலைநகர மருத்துவமனைகளில் தடுப்பூசி போட ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தடுப்பூசி போடப்பட்டது. ஆனால் தற்போது மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்படவில்லை. தமிழகத்தில் இருந்த தடுப்பூசி மருந்துகள் அதிக விலைக்கு வடநாட்டிற்கு சென்று விட்டன. தமிழகத்தில் சொல்வதை செய்யும் நிழல் முதல்வராக ஒ.பன்னீர்செல்வம் உள்ளார். மக்கள் முதல்வர் சொல்வதை, நிழல் முதல்வர் செய்து வருகிறார். சுயமாக முடிவெடுக்கும் அதிகாரம் கிடையாது.

தமிழகத்தில் வீடு புகுந்து கொள்ளை, கொலை, திருட்டு, தாலி பறிப்பு சம்பவம் என்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதால், மக்கள் அச்சத்துடன் வாழும் நிலை உள்ளது. விலைவாசி உயர்வு, மின்தட்டுப்பாடு என்று குறைகளை கூறி திமுக ஆட்சியை அகற்றினார்களோ, அதே குறைகள் அதிமுக ஆட்சியில் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள். அதிமுக ஆட்சியினால் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் உடைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டுள்ளன. எனவே நிச்சயம் 2016-ல் திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும். தமிழகத்தில் அனைத்து சாலைகளும் மிக மோசமாக உள்ளன. அனைத்து துறைகளிலிலும் முறைகேடுகள் நடைபெற்று வருகின்றனர். இதனால் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.

குறிப்பாக தமிழகத்தில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கலப்படம் செய்யப்பட்ட யூரியா, உரம் வழங்கப்பட்டதால், நெற்பயிர்கள் புகையான் நோய், பூச்சி தாக்குதல் ஏற்பட்டு விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வேளாண்துறையில் முற்றிலும் முறைகேடுகள் நடைபெற்று உள்ளன என எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

பேட்டியின் போது நகரச் செயலாளர் கே.ஆர்.செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர் த.ஜேம்ஸ்விஜயராகவன், நகர பொருளாளர் ஜாபர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.