முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லை அருகே கோயிலுக்கு சொந்தமான 1.88 ஏக்கர் நிலம் மீட்பு

திருநெல்வேலி அருகே குத்தகை வழங்காமல் சாகுபடி செய்து வந்த நெல்லையப்பர் கோயிலுக்கு சொந்தமான 1.88 ஏக்கர் நஞ்சை நிலத்தை புதன்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோயில் அதிகாரிகள் கையகப்படுத்தினர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:54 AM
பகிர்:

திருநெல்வேலி அருகே குத்தகை வழங்காமல் சாகுபடி செய்து வந்த நெல்லையப்பர் கோயிலுக்கு சொந்தமான 1.88 ஏக்கர் நஞ்சை நிலத்தை புதன்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோயில் அதிகாரிகள் கையகப்படுத்தினர்.

திருநெல்வேலி அருள்மிகு காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் கோயிலுக்கு சொந்தமான நஞ்சை நிலங்கள் இம்மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் உள்ளன. கோயில் நிலங்கள் குத்தகை அடிப்படையில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

அதன்படி திருநெல்வேலி அருகே சேந்திமங்களம் என்ற இடத்தில் உள்ள உள்ள நஞ்சை நிலங்கள் குத்தகை விடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை நெல் அளக்கும் ஒப்பந்தப்படி விளை நிலங்கள் குத்தகை விடப்படுகிறது. அவ்வாறு சேந்திமங்களத்தில் உள்ள விளை நிலத்தை அப்பகுதியை சேர்ந்த பிச்சைமுருகன் என்பவர் 72 சென்ட் நிலமும், சண்முகத்தம்மாள் என்பவர் 1.16 ஏக்கர் நிலமும் குத்தகை முறையில் அனுபவித்து வந்தனர்.

20 ஆண்டுகளுக்கு மேல் பிச்சைமுருகன், சண்முகத்தம்மாள் ஆகியோர் முறையாக கோயிலுக்கு வழங்க வேண்டிய குத்தகை நெல் வழங்கவில்லை. பிச்சைமுருகன் ஆண்டுக்கு 5 குவிண்டால் 86 கிலோ வீதம் 2010 ஆம் ஆண்டு வரை 178 குவிண்டால் 65 கிலோ நெல் கோயிலுக்கு வழங்க வேண்டிய நிலுவை உள்ளது.

இதேபோல் சண்முகத்தம்மாள் ஆண்டுக்கு 9 குவிண்டால் 46 கிலோ வீதம், இதுவரை 258 குவிண்டால் 32 கிலோ நெல் வழங்க வேண்டியது நிலுவையாக உள்ளது. இதை அடுத்து குத்தகை நெல் வழங்காத இருவர் மீதும் வருவாய் நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் வழக்குத் தொடர்ந்தது. வழக்கினை விசாரித்த சார் ஆட்சியர், கோயிலுக்கு செலுத்த வேண்டிய நெல் நிலுவையினை வழங்குமாறு இருவருக்கும் உத்தரவிட்டார். எனினும் இருவரும் கோயிலுக்கு வழங்க வேண்டிய நெல்லினை கோயிலுக்கு செலுத்தவில்லை. இதனை தொடர்ந்து கோயில் நிர்வாகம் தரப்பில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த கோயில் நிலத்தை கையகப்படுத்த உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து புதன்கிழமை இந்து சமயஅறநிலையத்துறை உதவி ஆணையர் கண்ணதாசன், கோயில் நிர்வாகஅதிகாரி என். யக்ஞநாராயணன் ஆகியோர், திருநெல்வேலி வட்டாட்சியர் மரகதநாதன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் சேந்திமங்களத்தில் 1.88 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. நிலம் கையகப்படுத்தப்பட்டு அதற்கான அறிவிப்பு பலகை அங்கு வைக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →