முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் 107 நாட்டு கோழிப்பண்ணைகள் அமைக்க இலக்கு

விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர் ஆகியோர் பயன்பெறும் வகையில் அரசு மானியத்துடன் 107 நாட்டுக் கோழிப்பண்ணைகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கால்நடைத்துறை துணை இயக்குநர் கார்த்திக் தெரிவித்தார். 

Updated On : 7 அக்டோபர், 2015 at 4:59 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:24 PM

விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர் ஆகியோர் பயன்பெறும் வகையில் அரசு மானியத்துடன் 107 நாட்டுக் கோழிப்பண்ணைகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கால்நடைத்துறை துணை இயக்குநர் கார்த்திக் தெரிவித்தார். 

இது குறித்து மேலும் அவர் புதன்கிழமை கூறியதாவது: அரசு சிறப்பு கோழிப்பண்ணை வளர்ப்பு திட்டம் மூலம் இறைச்சி கோழிப்பண்ணைத் தொழிலை ஊக்குவிக்கும் வகையில்  2012-13 முதல் தீவிரமாக இப்பண்ணைத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் 5 ஆயிரம் இறைச்சிக் கோழிகள் கொண்ட 35 பண்ணைகள் அமைக்க உத்தரவிட்டுள்ளது. இத்திட்டம் மூலம் ரூ.10.75 லட்சம் மதிப்பீட்டில் 5 ஆயிரம் இறைச்சிக் கோழிகள் கொண்ட பண்ணை அமைக்க சுய மூலதானமாகவோ அல்லது வங்கி நிதியுதவியோ ஏற்பாடு செய்யப்படும். இதற்கு அரசு மானியமாக ரூ.2.67 லட்சம் பயனாளிகளுக்கு வழங்கப்படும்.

எனவே பெரிய முதலீட்டில் செய்ய முடியாத விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர் ஆகியோர் பயன்பெறும் வகையில் நிகழாண்டில் நாட்டுக்கோழிகள் வளர்க்கும் திட்டத்தை செயல்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் 107 நாட்டுக்கோழிப்பண்ணைகள் வைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. 
  
இதன் மூலம் ரூ.1.29 லட்சம் குறைந்த முதலீட்டில் 250 நாட்டுக்கோழிகள் கொண்ட பண்ணைகள் அமைக்கலாம். அதிலும் விருப்பம் உள்ள பயனாளிகள் சுய மூலதனமாகவோ அல்லது வங்கி நிதி உதவியுடனோ பண்ணை அமைக்க கால்நடைத்துறை மூலம் ஏற்பாடு செய்யப்படும். ஏற்கனவே இறைச்சிக்கோழி வளர்ப்பில் பண்ணைகள் அமைத்துள்ள பயனாளிகள் மீண்டும் பயன்பெற முடியாது.

இத்திட்டத்தில் பயன்பெற கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த விவசாயிகள், தனிநபர், தொழில் முனைவோர் ஆகியோர் அந்தந்த பகுதியில் உள்ள கால்நடை மருந்தகங்களில் விண்ணப்பிக்கலாம். இவர்களிடம் நாட்டு கோழிப்பண்ணை அமைக்க போதிய நிலம் தங்கள் பெயரிலோ அல்லது குடும்ப  உறுப்பினர்கள் பெயரிலோ இருக்க வேண்டும். மேலும், கோழி வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களும், புதிய கொட்டகை அமைத்து நாட்டுக்கோழிப்பண்ணையை விரிவாக்கம் செய்ய ஆர்வமுள்ள விவசாயிகளும் இதில் பயனடையலாம்.

இதில், தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மையத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு பற்றி விரிவான பயிற்சி அளிக்கப்படும். எனவே இத்திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் அருகில் உள்ள கால்நடை மருந்தகங்கள், கோட்ட அலுவலகம் அல்லது மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.