நெல்லை மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினர்கள் நூதனப் போராட்டம்
திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை மாநகராட்சிப் பகுதியில் சாலை, தெருக்களில் தேங்கும் குப்பைகளை அகற்றாத நிர்வாகத்தை கண்டித்து மாமன்ற உறுப்பினர்கள் குப்பைத் தொட்டில் ஏறி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை மாநகராட்சிப் பகுதியில் சாலை, தெருக்களில் தேங்கும் குப்பைகளை அகற்றாத நிர்வாகத்தை கண்டித்து மாமன்ற உறுப்பினர்கள் குப்பைத் தொட்டில் ஏறி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் எஸ்.என். சரவணன், கொப்பரை சுப்பிரமணியன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை மாநகராட்சிக்கு வந்தனர். அவர்கள் திடீரென நுழைவு வாயிலில் உள்ள குப்பைத் தொட்டியில் ஏறி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருவரும் குப்பைத் தொட்டியில் இருந்தவாறு டீ குடித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது: மாநகராட்சி 48 ஆவது வார்டு பேட்டைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக சாலை, தெருக்களில் தேங்கும் குப்பைகள் அகற்றப் படவில்லை. குப்பை லாரிகள் இல்லாத நிலையில் துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடுகள் பரவி வருகிறது.
மாநகராட்சி வேறு பகுதியிலிருந்து பேட்டை ஐ.டி.ஐ. குடியிருப்பு பகுதியில் குப்பைகளை கொண்டு வந்து கொட்டுவதால் சுகாதார சீர்கேடுகள் அதிகரித்துள்ளது. இதேபோல் தச்ச்சநல்லூர் மண்டலம் 3 ஆவது வார்டு பகுதியிலும் குப்பைகள் அள்ளாமல் தேங்கி உள்ளது.
தற்போது டெங்கு போன்ற காய்ச்சல் பரவி வரும் சூழலில் குப்பைகளை அள்ளாத நிர்வாகத்தை கண்டித்து இந்த போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.