சிதம்பரத்தில் 4 வயது மகனை கொன்ற தந்தை கைது
சிதம்பரத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தனது 4 வயது மகனை கொன்ற தந்தையை நகர போலீஸார் கைது செய்தனர்.
சிதம்பரம்: சிதம்பரத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தனது 4 வயது மகனை கொன்ற தந்தையை நகர போலீஸார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் 1-வது வார்டு சகஜானந்தா தெருவைச் சேர்ந்த வெற்றிச்செல்வன் (27). சமையல் கேஸ் சிலிண்டர் டெலிவரி ஊழியராக பணியாற்றி வரும் இவரது மனைவி பெயர் நீலா (25). இவர்களுக்கு முகுந்தன் (4), தமிழ் (3), கைகுழந்தை உள்ளிட்ட 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். வெற்றிச்செல்வனுக்கும், மனைவி நீலாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு மனைவி நீலா தனது தாயார் வாசுகி வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் வெற்றிச்செல்வன் மதுபோதையில் திங்கள்கிழமை இரவு மாமியார் வீட்டிற்கு சென்று நீலாவை ஆபாசமாக திட்டி மூத்த மகன் முகுந்தன் (4), தமிழ் (3) ஆகிய இருவரையும் அழைத்துக்கொண்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இரவு 12 மணிக்கு போன் செய்து மூத்தமகன் முகுந்தன் இறந்துவிட்டான் என மாமியார் வாசுகிக்கு போன் செய்துள்ளான் வெற்றிச்செல்வன். சம்பவ இடத்திற்கு சென்ற போது சிறுவன் முகுந்தன் மூச்சிதினறி இறந்து கிடந்தான்.
இதுகுறித்து வெற்றிச்செல்வனின் மனைவி நீலா கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து மகனை கொலை செய்த தந்தை வெற்றிச்செல்வனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.