நண்பனைக் கடத்திக் கொலை செய்த வழக்கு: இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் பணம் கேட்டு மிரட்டுவதற்காக நண்பனைக் கடத்திக் கொலை செய்த வழக்கில் இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கியது.
தற்போதைய செய்திகள்நண்பனைக் கடத்திக் கொலை செய்த வழக்கு: இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் பணம் கேட்டு மிரட்டுவதற்காக நண்பனைக் கடத்திக் கொலை செய்த வழக்கில் இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கியது.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் பணம் கேட்டு மிரட்டுவதற்காக நண்பனைக் கடத்திக் கொலை செய்த வழக்கில் இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கியது.
ராஜபாளையம், ஸ்ரீரெங்கபாளையத்தைச் சேர்ந்தவர் எஸ்.எஸ்.பாலகிருஷ்ணன். இவரது மகன் சிவரஞ்சித் (25). ராஜபாளையம், கூரைப்பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வளையாபதி மகன் சக்திகுமார் (25). இவரும் மதுரை, திருமங்கலத்தை அடுத்துள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக்கில் படித்துள்ளார்கள். இதனால் இருவரும் நண்பர்கள். ராஜபாளையத்தில் உள்ள ஒரு பள்ளி விளையாட்டு மைதனத்தில் இருவரும் விளையாடச் செல்வார்கள். அப்போது அங்கு ராஜபாளையம், அழகைநகரைச் சேர்ந்த தொழிலதிபர் கஜேந்திரராஜா மகன் பிரேம்குமார் (18) என்பவரும் விளையாட வருவாராம். இதில் மூவரும் நண்பர்கள் ஆனார்கள். மேலும் மூவருக்கும் மது குடிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சிவரஞ்சித்திற்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் தன்னிடம் வேலை செய்த கணேசன் என்பவரிடம் பணம் இரட்டிப்பு செய்வதற்காக ரூ.15 லட்சத்தைக் கொடுத்து ஏமாந்துள்ளார். இதனைச் சரிக்கட்டவும், சக்திகுமார் குடும்பத்தின் ஏழ்மை நிலையைப் போக்கவும் வசதியான நபரைக் கடத்தி, அவர்கள் குடும்பத்தினரை மிரட்டி பணம் பறிக்க இருவரும் திட்டமிட்டுள்ளார்கள்.
4.5.2013-ஆம் தேதி தங்களது திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, பிரேம்குமாரை தொடர்பு கொண்டுள்ளார்கள். அவர் தனது கடலை உடைக்கும் மில்லில் வசூலான தொகை ரூ.80 ஆயிரத்துடன் இருந்துள்ளார். அங்கு சென்று, அவரை மோட்டார் சைக்கிளில் சிவரஞ்சித் அழைத்துக் கொண்டு, வழக்கமாக தென்றல் நகரில் உள்ள ஒரு மொட்டை மாடியில் மது குடிக்கும் இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே சக்திகுமார் இருந்துள்ளார். பிரேம்குமாருக்கு மதுவில் டயோசிபேம் என்ற தூக்க மாத்திரையைக் கலந்து கொடுத்துள்ளார்கள். இதில் பிரேம்குமார் மயக்கமுற்றுள்ளார். பின்னர் ஒரு ஆம்னி வேனில், சிவரஞ்சித்திற்குச் சொந்தமான முதுகுடி சிட்கோவில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலைக்குச் சென்றுள்ளார்கள். அங்கு ஒரு அறையில் பிரேம்குமாரை அடைத்து வைத்திருந்துள்ளார்கள். பிரேம்குமார் நிலைமையைக் கண்டு, தங்களது திட்டம் வெளியே தெரிந்துவிடும் என்று அஞ்சி, தெர்மோ கேபிள் வயரைக் கொண்டு பிரேம்குமார் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்கள். பின்னர் தயாராக தோண்டி வைத்திருந்த குழியில் அவர் அணிந்திருந்த ஆடைகளைக் கழற்றிவிட்டு சடலத்தை உள்ளே வைத்து சிமெண்ட் கலவை கொண்டு மூடியுள்ளார்கள். பின்னர் ஆடைகள், கேபிள் வயர் உள்ளிட்டவற்றை ராஜபாளையம்-திருநெல்வேலி சாலையில் உள்ள கோதைநாச்சியார்புரம் விலக்கில் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்கள்.
5.5.13-ஆம் தேதி கஜேந்திரராஜாவிற்கு, பிரேம்குமாரின் செல்போனிலிருந்து சிவரஞ்சித் மிஸ்டு கால் கொடுத்துள்ளார். தொழில் காரணமாக எர்ணாக்குளத்திலிருந்த கஜேந்திரராஜா பின்னர் மகனின் எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளார். அப்போது பேசிய இவர்கள், நேற்றே உங்களது மகனைக் கடத்தி விட்டோம். ரூ.1.50 கோடி பணம் கொடுத்தால் மகனை விடுவிப்பதாகக் கூறியுள்ளார்கள். இது குறித்து கஜேந்திரராஜா ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
பிரேம்குமாரின் அணைத்து வைத்திருந்த செல்போன் ஆன் ஆனவுடன், போலீஸார் குறிப்பிட்ட எண்ணை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது செல்போன் கோபுரத்தின் எல்கையை வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடித்தனர்.
போலீஸார், சிவரஞ்சித் மற்றும் சக்திகுமாரைக் கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இதற்கிடையே கஜேந்திரராஜா, மதுரையில் உள்ள உயர்நீதிமன்றக் கிளையில் இந்த வழக்கை உடனே விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்திருந்தார். உயர் நீதிமன்றம் விரைவில் வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்க மாவட்ட நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இதன்படி மிக விரைவாக இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அரசு தரப்பில் வழக்குரைஞர் அ.மங்களசாமி ஆஜராகி வாதாடினார்.
வழக்கை விசாரித்த முதன்மை அமர்வு நீதிபதி ரா.தாரணி, பிரேம்குமாரைக் கடத்திய குற்றத்திற்காக இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்தார். அவரை கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரமும் அபராதம் விதித்தார். மேலும் தடயங்களை மறைத்த குற்றத்திற்காக ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். தணைடனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.