முகப்பு
தற்போதைய செய்திகள்

அதிமுக சார்பில் ஜெ.மறைவுக்கு இரங்கல் பேரணி: ஏராளமானோர் பங்கேற்பு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவாக புதுச்சேரியில் அதிமுக சார்பில் வெள்ளிக்கிழமை இரங்கல் பேரணி நடைபெற்றது.

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:53 PM
பகிர்:

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவாக புதுச்சேரியில் அதிமுக சார்பில் வெள்ளிக்கிழமை இரங்கல் பேரணி நடைபெற்றது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது இறுதி நல்லடக்கம் சென்னை மெரீனா கடற்கரையில் எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் நடைபெற்றது.

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஒருநாள் விடுமுறை, அரசு சார்பில் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. அதிமுகவினர், பொதுமக்களும் புதுவை முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஜெயலலிதா உருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

இரங்கல் பேரணி

இதன் தொடர்ச்சியாக அதிமுக சார்பில் வெள்ளிக்கிழமை இரங்கல் பேரணி நடந்தது. கட்சித் தலைமை அலுவலகத்தில் தொடங்கிய பேரணிக்கு மாநில பொருளாளர் சுத்துக்கேணி பாஸ்கர் தலைமை தாங்கினார். சட்டப்பேரவைக் குழுத் தலைவர் ஆ.அன்பழகன், எம்.எல்.ஏக்கள் ஆ.பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் மற்றும் பல்வேறு பிரிவுகளின் நிர்வாகிகள் தொண்டர்கள் பேரணியில் மெழுகுவர்த்தி ஏந்தி சென்றனர்.

உப்பளத்தில் இருந்து சுப்பையா சாலை வழியாகச் சென்று மீண்டும் கடற்கரைச் சாலையில் உள்ள டூயுப்ளே சிலை அருகே நிறைவடைந்தது. அங்கு ஜெயலலிதா படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அன்பழகன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவிக்கு பொதுக்குழு யாரை தேர்வு செய்தாலும் கட்டுப்பட்டு ஏற்றுக் கொள்வோம். சசிகலாவை பொதுச் செயலாளராக நியமித்தாலும் நாங்கள் அவரின் கீழ் செயல்படுவோம் என்றார். 

இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் புருஷோத்தமன், முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர் தரப்பினர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.