முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் நேரடி கொள்முதல் நிலையங்களை அரசு அதிகப்படுத்த வேண்டும்: ஜி.கே.வாசன்

தமிழகத்தில் நேரடி கொள்முதல் நிலையங்களை அரசு அதிகப்படுத்த வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

Updated On : 3 ஜூலை, 2016 at 7:36 PM
பகிர்:

தமிழகத்தில் நேரடி கொள்முதல் நிலையங்களை அரசு அதிகப்படுத்த வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

 இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-

 தமிழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அதிகப்படுத்திடவும், மத்திய அரசின் தொகுப்பிலிருந்து தொடர்ந்து அரிசியைத் தமிழகத்துக்குப் பெற்றுத் தரவும் தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

Advertisement

 தமிழகத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் விலையில்லா அரிசி 20 கிலோ வீதம் வழங்கப்பட்டு வருகிறது.

 இதற்காக தமிழக அரசுக்கு மாதம் தோறும் 3 லட்சம் மெட்ரிக் டன் அரிசி தேவைப்படுகிறது.  ஆனால், மத்திய அரசு 2 இலட்சம் மெட்ரிக் டன் அரிசியை வழங்கி வருகிறது.

 தமிழ்நாடு நுகர்பொருள் வாரிய கழகம் மூலம் விவசாயிகளிடமிருந்து பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் அடிப்படையில் நெல் கொள்முதல்

செய்யப்பட்டு, அதன் மூலம் சுமார் 1 இலட்சம் மெட்ரிக் டன் அரிசி கிடைக்கப் பெறுவதால், இத்திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

 2013 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய தேசிய உணவு பாதுகாப்பு மசோதாவில் உள்ள சில விதிமுறைகள், மாநிலத்தின் பொது வினியோகத் திட்டத்தினை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதால் தமிழக அரசு உள்பட சில மாநிலங்கள் இந்த மசோதாவை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை.

 தமிழக அரசுக்கு ஒரு கால அவகாசம் கொடுக்கப்பட்டு அது வரையில் மத்திய அரசின் தொகுப்பிலிருந்து அரிசி தொடர்ந்து தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது. அதனால் தமிழகத்துக்கு போதிய அரிசி கிடைத்து வருகிறது.

 ஆனால், அந்த கால அவகாசம் இன்னும் சில மாதங்களில் முடிவடையும் தருவாயில் உள்ளது.  எனவே, தமிழக அரசு தமிழகத்தில் டெல்டா மாவட்டம் உள்பட அனைத்து மாவட்டப் பகுதிகளிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அதிகப்படுத்தி, அரசாங்கமே முழுமையாக நெல்லை கொள்முதல் செய்திட வேண்டும்.

 மேலும், தமிழகத்துக்கு மத்திய அரசு அளித்த கால அவகாசத்தை நீட்டிக்கச் செய்திடவும், அதனைத் தொடர்ந்து மத்திய அரசின் தொகுப்பிலிருந்து தமிழகத்துக்கு தொடர்ந்து அரிசி வழங்கவும் தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.