சரநாராயணப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.
புகழ் பெற்ற பண்ருட்டி ஸ்ரீ சரநாராயணப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
புகழ் பெற்ற பண்ருட்டி ஸ்ரீ சரநாராயணப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
பண்ருட்டி, திருவதிகையில் சிறப்பு பெற்ற ஸ்ரீ ஹேமாம்புஜவல்லி சமேத ஸ்ரீ சரநாராயணப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது. தமிழக இந்து சமய அறநிலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் சுமார் 1300 ஆண்டுகள் (பல்லவர்) பழமை வாய்ந்தது.
இக்கோயிலுக்கு 30 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. கோயிலின் கிழக்கு பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பில், 5 நிலை கோபுரம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கோயில் சீரமைக்கப்பட்டு, வண்ணம் தீட்டப்பட்டு புதுப் பொலிவுடன் காட்சி அளிக்கிறது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மார்ச் 14-ஆம் தேதிமுதல் யாகசாலை பூஜைகள் நடந்து வந்தன.
வெள்ளிக்கிழமை காலை கோபூஜை, சுப்ரபாதம், புண்யாஹம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு கடம் புறப்பாடு நடைபெற்றது. காலை 10 மணி அளவில் விமானங்கள், ராஜகோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டன.