போதிய பண பரிவர்த்தனை இல்லாததால் தூத்துக்குடியில் மீன்பிடி தொழில் முடக்கம்
போதிய பண பரிவர்த்தனை இல்லாததால் தூத்துக்குடியில் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விசைப்படகு மீனவர்கள் வெள்ளிக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
தூத்துக்குடி,
போதிய பண பரிவர்த்தனை இல்லாததால் தூத்துக்குடியில் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விசைப்படகு மீனவர்கள் வெள்ளிக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருக்காது என மத்திய அரசு அறிவித்தைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள நோட்டுகளை வங்கி மற்றும் அஞ்சலகங்களுக்குச் சென்று மாற்றி வருகின்றனர். தூத்துக்குடியில் உள்ள வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்கள் முன்பு வெள்ளிக்கிழமை பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பணத்தை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே, தற்போது ஏற்பட்டுள்ள பண புழக்கம் குறைவு காரணமாக தூத்துக்குடியின் முக்கிய தொழிலான மீன்பிடிதொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, தூத்துக்குடி மீன்பிடிதுறைமுகத்தில் இருந்து தினமும் 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வது வழக்கம்.
ஆனால், மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை பெறுவதற்காக வெளி மாவட்ட வியாபாரிகள் மற்றும் கேரள வியாபாரிகள் வாங்கிச் செல்வது உண்டு. ஆனால், கடந்த இரண்டு நாள்களாகவே விசைப்படகுகள் பிடித்துவரும் மீன்களுக்கு வியாபாரிகள் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை அளித்து வருகின்றனராம்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மீனவர்கள் வாங்குவதில்லை என தெரிவித்ததால் வியாழக்கிழமை இரவு மீன்கள் வியாபாரம் ஆகாதநிலை ஏற்பட்டது. இதனால், கடலில் இருந்து பிடித்து வந்த மீன்களுக்கு போதிய விலை கிடைக்காத நிலை ஏற்பட்டது.
இதையெடுத்து, பணப்புழக்கம் பிரச்னை தீரும் வரையில் கடலுக்குச் செல்வதில்லை என விசைப்படகு மீனவர்கள் முடிவு எடுத்து வெள்ளிக்கிழமை காலை முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால், 250-க்கும் மேற்பட் விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
இதுதவிர, கடலில் எதிர்பார்த்த அளவுக்கு மீன்கள் கிடைப்பது இல்லை என்றும் கூறப்படுகிறது. போதிய விலை இல்லை, பணப்புழக்கம் இல்லை, மீன்கள் கிடைப்பதில்லை என பல காரணங்கள் கூறப்பட்டாலும் பணப்புழக்கம் சீரான நிலைக்கு வந்த பிறகுதான் மீண்டும் மீன்பிடிக்க செல்ல உள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.