தேசிய மக்கள் நீதிமன்றம்: 6490 வழக்குகள் மூலம் ரூ.3.6 கோடிக்கு தீர்வு
புதுச்சேரியில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 6490 வழக்குகள் பரிசீலிக்கப்பட்டு ரூ.3.6 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.
புதுச்சேரி,
புதுச்சேரியில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 6490 வழக்குகள் பரிசீலிக்கப்பட்டு ரூ.3.6 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.
தேசிய சட்டப்பணிகள் ஆணைய செயல் தலைவரின் உத்தரவுப்படியும், புதுச்சேரி மாநில சட்ட பணிகள் ஆணைய செயல் தலைவரும், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசருமான ஜெய்சந்திரன் வழிகாட்டுதலின்படியும் தேசிய மக்கள் நீதிமன்றம் புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலும், காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் அந்தந்த நீதிமன்றங்களிலும் சனிக்கிழமை நடைபெற்றது.
தேசிய நீதிமன்றத்தில் ஏற்கனவே நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளும், நீதிமன்றத்திற்கு போகாமல் உள்ள நேரடி வழக்குகளும் என சமாதானம் செய்யத்தக்க குற்றவியல் வழக்குகள், காசோலை வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நீதிமன்ற வழக்குகள், தொழிலாளர் சம்பந்தப்பட்ட வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், சிவில் வழக்குகள் மற்றும் வங்கி கடன் சம்பந்தப்பட்ட வழக்குகள், வருவாய் துறை சம்பந்தப்பட்ட வழக்குகள் உரிமையியல் சிவில் வழக்குகள், நூறு நாட்கள் வேலை சம்பந்தப்பட்ட வழக்குகள், வணிக வரி, வருமான வரி சம்பந்தப்பட்ட வழக்குகள், பணியிலிருந்து ஓய்வு பெற்ற வழக்குகள், சம்பளம் மற்றும் ஓய்வூதிய பயன்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் போக்குவரத்து குற்ற வழக்குகள், சிறு வழக்குகள் ஆகியவை பரிசீலனைக்கு எடுக்கப்பட்டன.
ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் ஜி.பேட்ரிக், டிகே.வேணுகோபாலு, ஆர்.வெங்கடவரதன் ஆகியோர் தலைமையில் தனித்தனி அமர்வுகள் அமைக்கப்பட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன.
புதுச்சேரி தலைமை நீதிபதி எஸ்.ராமதிலகம், சட்டத்துறை செயலாளர் கோ.செந்தில்குமார், சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலர் வ.சோபனாதேவி, இதர நீதிபதிகள், ஆணைய ஆய்வு வழக்குரைஞர்கள், பார் அசோசியேஷன் நிர்வாகிகள் மூத்த வழக்குரைஞர்கள், காப்பீடு நிறுவன அதிகாரிகள் பங்கேற்றனர்.
மக்கள் நீதிமன்றத்தில் வாகன விபத்து, நஷ்ட ஈடு வழக்கு ஒன்றில் குருவிநத்தம் பகுதியைச் சேர்ந்த மனுதாரர் ராமசாமி என்பவர் வழக்கு எடுக்கப்பட்டு சோழமண்டலம் பொது காப்பீடு நிறுவனம் மூலம் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.
புதுச்சேரி மாநிலம் முழுவதும் தேசிய நீதிமன்றத்தில் மொத்தம் 10214 வழக்குகள் எடுக்கப்பட்டு 6490 வழக்குகள் தீர்வு காணப்பட்டு ரூ.3.61 கோடிக்கு தீர்வு ஏற்பட்டது.